animated gif how to

சிரியா மீதான தடையை ஐரோப்பிய யூனியன் தீவிரப்படுத்தியது

August 04, 2011 |

August 04, 2011.... AL-IHZAN World News

மக்கள் எழுச்சி போராட்டங்களை அடக்கி ஒடுக்கும் பஸ்ஸாருல் ஆஸாத் அரசின் ராணுவ நடவடிக்கைகளை  தொடர்ந்து ஐரோப்பிய யூனியன் சிரியா அரசு மீதான தடையை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது.
அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத், பாதுகாப்பு அமைச்சர் அலி ஹபீப் ஆகியோர் மீது ஐரோப்பியன் யூனியன் ஏற்கனவே தடை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடைய சொத்துக்களை கண்டுபிடிக்கவும், பயணங்களுக்கு தடை விதிக்கவும் ஐரோப்பியன் தீர்மானித்துள்ளது. சிரியாவுக்கு எதிரான தடையை உலக நாடுகள் வலுப்படுத்தவேண்டும் எனவும், இவ்விவகாரத்தில் ஐ.நா தலையிடவேண்டும் எனவும் ஹமாயில் சிரியா அரசின் ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து பிரிட்டனின் வெளியுறவுத்துறை செயலாளர் வில்லியம் ஹேக் நேற்று முன் தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
நேற்று முன் தினம் ஹமாயில் பஸ்ஸாருல் ஆஸாதின் ராணுவத்தினர் நடத்திய கொடூர வெறியின் உச்சக்கட்டத்தில் நிகழ்ந்த கூட்டுப்படுகொலைக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார். பஸ்ஸாரின் நடவடிக்கைகள் வரம்பை மீறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பஸ்ஸாருல் ஆஸாத் நாட்டை ஆளுவதற்கான சட்டரீதியிலான உரிமையை இழந்துவிட்டார் என தான் முன்னர் கூறிய அறிக்கையை ஹிலாரி கிளிண்டன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பஸ்ஸாருல் ஆஸாத் விரைவில் ஜனநாயகத்தின் பால் திரும்பவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
பஸ்ஸாருல் ஆஸாத் அரசு நடத்திவரும் கொடூர படுகொலைகளுக்கு துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் தாவுதோக்லு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். புண்ணிய ரமலான் மாதத்தில் சிரிய அரசின் நடவடிக்கைகள் சிரியாவின் மக்களுக்கும், முஸ்லிம் உலகத்திற்கும், உலக மக்களுக்கும் தவறான அறிகுறியை வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே நேற்று முன் தினம் மத்திய சிரியா நகரமான ஹமாயில் ராணுவ தாக்குதல் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புனித ரமலான் மாதத்தின் முதல் நாள் இப்பகுதியில் பத்து எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை ராணுவம் வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இங்கு ஆறுபேர் நேற்று கொல்லப்பட்டனர். இப்பகுதியிலிருந்து ஏராளமானோர் வெளியேறியுள்ளனர்.
மார்ச் மாதம் பஸ்ஸாருல் ஆஸாதின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக துவங்கிய மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கொல்லப்பட்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!