August 15, 2011.... AL-IHZAN India News
இந்தியா அனைத்து வளங்களும் கொண்ட நாடு. இந்தியா வல்லரசாக வேண்டும் என்று நம் எல்லோருக்கும் கனவு இருக்கிறது. உலகம் முழுவதும் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இந்த வேளையில் இந்தியாவில் அந்தப் பாதிப்பு இல்லை. உலக அறிஞர்கள் இந்தியாவைப் புகழ்கிறார்கள். இப்படிப்பட்ட சிறப்புமிக்க இந்தியா 64 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அடிமை நாடு. சுமால் 200 வருட காலம் இந்தியாவை பிரிட்டிஷார் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.
இந்தியாவை மீட்பதற்கு சுதந்திரப் போராட்டத்தைத் துவக்கி வைத்தவர் சிராஜுத் தவ்லா என்ற வங்கத்துச் சிங்கம். இவர் நடத்திய பிளாசிப் போர்தான் முதல் சுதந்திரப் போர்.
இப்படி சுதந்திரப் போரைத் துவக்கி வைத்தவர்கள் முஸ்லிம்கள். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 வரை முஸ்லிம்களால்தான் சுதந்திர தீபம் ஏற்றப்பட்டு வந்தது.
பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங் சொல்கிறார்: “முஸ்லிம்கள் சுதந்திரத்திற்காகச் செய்த தியாகம் அவர்களது மக்கள் தொகையை விட அதிக சதவீதமாக இருந்தது.”
டெல்லியின் சாலையோரம் முழுவதும் சுதந்திரப் போரில் ஈடுபட்ட மார்க்க அறிஞர்களின் உடல்கள் மரங்களில் கட்டி தொங்க விடப்பட்டிருந்தன.
ஏன்,ஷாஹ் வலியுல்லாஹ் போன்ற மார்க்க அறிஞர்கள் “சுதந்திரப் போர் மார்க்கக் கடமை” என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள். முஸ்லிம் சமுதாயம் கல்வியில் – ஆங்கிலத்தில் இன்று பின்தங்கியிருக்கிறது என்றால் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் கொடுத்த விலை அது.
ஆம்! ஆங்கிலேயர்களின் மேலுள்ள வெறுப்பில் ஆங்கிலக் கல்வியைக் கற்பது ஹராம் என்று மார்க்கத் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. ஏன், ஆங்கிலக் கல்விக் கூடத்திற்கு அனுப்புவதையே ஹராம் என்றார்கள்.
கிலாஃபத் இயக்கம், சிப்பாய்க் கலகம் என்று அத்தனை போராட்டங்களையும் ஆரம்பித்து, முன்னணியில் நின்று நடத்தி முடித்தவர்கள் முஸ்லிம்கள்.
இப்பொழுது முஸ்லிம் சமுதாயம் எந்த நிலையில் இருக்கிறது? ஏனைய சமூகங்களை விட, தலித்களை விட, மலைவாழ் மக்களை விட அனைத்திலும் பின்தங்கியிருக்கிறார்கள். இதனைத்தான் சச்சார் கமிஷன் தெளிவாகக் கூறுகிறது.
முஸ்லிம்களின் மக்கள்தொகை விகிதாச்சாரம் 13.4 சதவீதம் என்று அரசு கூறுகிறது. ஆனால் அரசுப் பணிகளில் 4.9 சதவீதமே முஸ்லிம்கள் உள்ளனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற துறைகளில் 3.2 சதவீதமே முஸ்லிம்கள் உள்ளனர்.
கல்வி அறிவில் (Literacy) ஹிந்துக்கள் 65 சதவீதம், கிறிஸ்தவர்கள் 80 சதவீதம். ஆனால் முஸ்லிம்களோ வெறும் 56 சதவீதம் மட்டுமே கல்வி அறிவு பெற்றுள்ளனர்.
பட்டம் பெற்ற முஸ்லிம்கள் வெறும் 3.6 சதவீதம் மட்டுமே! இராணுவம், உளவுத்துறைகளில் முஸ்லிம்களின் விகிதாச்சாரத்தைக் கணக்கெடுக்க நீதிபதி ராஜேந்திர சச்சார் முயன்றார். ஆனால் அவருக்கு உரிய தகவல்கள் கிடைக்கவில்லை.
தமிழகத்தில் 5.6 சதவீதம் வாழும் முஸ்லிம்களில் வெறும் 0.17 சதவீதம் மட்டுமே காவல்துறையில் பணிபுரிகின்றனர். விமானப் படை, ஐ.பி. என்ற மத்திய நுண்ணறிவுப் பிரிவில் முஸ்லிம்களைச் சேர்க்கக்கூடாது என்பது எழுதப்படாத விதி.
ஏன்? முஸ்லிம்கள் இரகசியங்களை வெளியிட்டுவிடுவார்களாம். ஆனால் இதுவரை இரகசியங்களை வெளியிட்டு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம் அல்லாதவர்களே!
தலித்துகளில் 28 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள். ஆனால் ஒட்டுமொத்த முஸ்லிம்களில் 31 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். அதாவது தலித்துகளை விட முஸ்லிம்களின் நிலை மிக மோசமாக உள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 33 சதவீத கிராமங்களில் தொடக்கப்பள்ளி கூட இல்லை. அதேபோல் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 40 சதவீத கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை.
கடந்த 64 ஆண்டுகளில் பெரும் பெரும் கலவரங்களின் மூலமாக முஸ்லிம்களின் இலட்சக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டன. பல ஆயிரம் கோடி சொத்துகள் சூறையாடப்பட்டன. முஸ்லிம்களை அழிப்பதற்கென்று 30க்கும் மேற்பட்ட ஃபாசிச பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன.
இந்த ஃபாசிச பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த ஃபாசிஸ்டுகள் பிளவுகளை உருவாக்க பாடுபடுகின்றார்கள். எங்காவது சிறு பொறி பற்றி கலவரத் தீ பரவாதா என்ற துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நீதிமன்றம், காவல்துறை, ஆகியவற்றிலிருந்தும் கலவரங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பாபரி மஸ்ஜித் இடித்துத் தகர்க்கப்பட்டு 18 வருடங்களுக்குப் பிறகு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் தீர்ப்பு வெளிவந்தது.
மும்பை கலவரத்தில் 3000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உயிரிழந்தார்கள். அந்த வழக்குகள் இன்னும் இழுபறியில் உள்ளன. ஆனால் அதன் பின்பு நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் விரைவு நீதிமன்றம் விரைந்து தீர்ப்பை வழங்கியது.
கோவை கலவரத்தில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அந்த வழக்கு இழுபறியில் இருக்கும்பொழுதே அதன் பின்பு நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பு வெளியானது.
இந்த நிலையை மாற்ற முஸ்லிம் சமுதாயம் முன்வரவேண்டும். சமூக மேம்பாடு, பொருளாதார மேம்பாடு, கலாச்சார மேம்பாடு, அரசியல் உரிமைகளை மீட்டெடுப்பது ஆகியவற்றில் அயராது பாடுபடும் ஒரு கூட்டம் உருவாகவேண்டும்.
முஸ்லிம்களுக்கெதிராகவும், இஸ்லாத்திற்கெதிராகவும் கருத்தியல் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. உடல் ரீதியான, அரசியல் ரீதியான தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இவைகளை எதிர்கொள்வதற்காக முஸ்லிம்கள் உறுதியாக நின்று போராட வேண்டும். அரசியல் அதிகாரங்களைக் கைப்பற்ற வேண்டும்.
அப்பொழுதுதான் உண்மையான சுதந்திரம் பெற்ற புதிய இந்தியாவை உருவாக்க முடியும்.
0 கருத்துரைகள் :
Post a Comment