July 19, 2011.... AL-IHZAN Local News
காத்தான்குடி சம்பவம் அந்நிய சமூகங்களால் எவ்வாறு நோக்கப்படுகின்றது என்பதை எமது வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக Lakbima News பத்திரிகையில் எழுதப்பட்ட Islamic Fundamentalism grows in Kattankudy எனும் ஆக்கம் இங்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி நகரிலுள்ள முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு கடந்த வாரம் நீதிமன்றத்தினால் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவு என்னவெனில், இணையத்தளம் மூலம் ஆபாசப்படங்கள் பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இளம் பெண் பிள்ளைகளும் நிரபராதிகள். அவர்கள் அவ்வாறான குற்றத்தை செய்யவில்லையென்று பள்ளிவாயல்கள் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதாகும். இக்குற்றச்சாட்டை அந்த இரு இளம் யுவதிகளும் மறுத்தமையும் குறிப்பிடத்தக்கது...Internet Cafe யிலிருந்து வெளியேறிய 17 வயதை யுடைய இரு யுவதிகள் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்களால் சுற்றி வளைக்கப்பட்டனர், அவ்விருவரும் ஆபாசப் படங்கள் பார்த்ததாக அங்கிருந்தவர்களால் குற்றம் சாட்டப்பட்டது. பின்பு அவ்விருவரும் வீடொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர்.
பின்பு அவ்விரு யுவதிகளும் ஓர் இஸ்லாமிய நிறுவனத்தின் காரியாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அத்தோடு பள்ளிவாயல் ஒலிபெருக்கி மூலம் இவ்விரண்டு யுவதிகளும் ஆபாசப் படங்கள் பார்த்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவ்விருவரையும் குற்றத்தை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காகவே அவ்வாறு இஸ்லாமிய நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பெரிய மக்கள் கூட்டமொன்று அந்த இஸ்லாமிய நிறுவனத்தை சூழ்ந்து கொண்டதோடு அவ்விரு யுவதிகளையும் திட்டித் தீர்த்தனர்.
இறுதியில் பொலிஸார் இவ்விடயத்தில் தலையிட்டு அவ்விரு யுவதிகளையும் விடுவித்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். காடையர்களால் தாக்கப்பட்ட காயங்களுக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. பின்பு அவ்விரு யுவதிகளில் ஒருவரின் தந்தை நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதிமன்றம் அவ்விரு யுவதிகளும் நிரபராதிகள் என்றும் அதனைப் பள்ளிவாயல் ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. தனது மகளுக்கு நீதியை நிலைநாட்டியமை குறித்து ஒரு யுவதியின் தந்தையான முஹம்மத் யூஸுப் ரஸ்ஸாக் நீதிபதிகளுக்கு நன்றி கூறினார்.
இந்நிகழ்வு கிழக்கு முஸ்லிம் பகுதிகளில் வளர்ந்துவரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கான ஓர் எடுத்துக்காட்டு மட்டுமேயாகும். பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் இப்பகுதிகளில் முகத்தை மூடி அணியும் புர்காவை அணியத் தொடங்கியுள்ளனர். இளம் யுவதிகளும் இவ்வாறு ஆடை அணியுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அத்தோடு இஸ்லாத்திற்கு மாறான செயற்பாடுகளை எதிர்ப்பதற்காக தாடி வைத்த ஆண்கள் ஒன்றிணைகிறார்கள். மேற்கத்தேய நாகரிகத்திற்கு அமைய ஆடை அணியும் பெண்களைப் பார்த்து பலர் முகம் சுழிப்பதோடு அவர்கள் பகிரங்கமாக கேவலப்படுத்தப்படுகிறார்கள்.
இஸ்லாமிய மத்ரஸாக்கள் இப்பகுதியில் அதிகமாகக் காணப்படுவதோடு அவை அல்-காஇதாவினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தீவிர இஸ்லாமியப் போக்கைப் போதிக்கின்றன. கடும்போக்கு கொண்ட பெற்றோர் தம் பிள்ளைகளை புர்கா (நிகாப்) அணியுமாறு நிர்ப்பந்திக்கின்றனர் என்று ரியாஸ் ஸாலி குறிப்பிடுகிறார். இவர் முஸ்லிம் மார்க்கச் செயற்பாட்டாளரும் வட அமெரிக்க இஸ்லாமிய சகவாழ்வு மையத்தின் தலைவருமாவார்.
பெண்கள் முகம் மூடும் வழக்கம் எமது நாட்டில் இருந்ததில்லை. அப்படியொரு வரலாறும் இங்கில்லை. இவையனைத்தும் வஹ்ஹாபிகளால் இறக்குமதி செய்யப்பட்டவையாகும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். இஸ்லாமிய கடும்போக்குவாதிகள் காத்தான்குடியில் ஷரீஆ சட்டத்தை நிலைநாட்ட முயற்சிக்கின்றனர் என்றும் இது ஷரீஆ சட்டத்திற்கான இடமல்ல, முஸ்லிம்களுக்கென்று தனியானதொரு சட்டத்திற்கான எந்தத் தேவையும் இந்த நாட்டில் இல்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 6 அல்லது 7 வருடங்களுக்கு முன்புதான் இஸ்லாமிய அடிப்படைவாதம் காத்தான்குடிக்கு அறிமுகமானது. அதற்கு முன்பு அவர்கள் கண்டி, கல்முனைப் பகுதிகளிலேயே செயற்பட்டு வந்தனர். காத்தான்குடியில் அவர்களுக்கான வாய்ப்பு இருக்கவில்லை. இந்த வஹ்ஹாபிகளின் வளர்ச்சிக்கான காரணம் அரசியல்வாதிகளாகும். தங்களது சுயலாப அரசியலுக்காக கடும்போக்கு இஸ்லாத்தை இவர்கள் ஆதரித்தனர்.
வஹ்ஹாபிசமானது நவீன இஸ்லாமிய சிந்தனைகள், சூபித்துவம் போன்றவற்றிற்கு எதிரானதாகும். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வாழைச்சேனைப் பகுதியில் சூபித்துவ இஸ்லாத்தைப் போதித்துக் கொண்டிருந்த றிஸ்வி மௌலவி கடும்போக்குவாதிகளான ஒரு குழுவினரால் கடத்தப்பட்டார். கடத்தல்காரர்கள் அவரது தாடியை நீக்கிவிட்டு நிர்வாணப் பெண்களோடு அவரை நிற்பதற்கு நிர்ப்பந்தித்து அதனைப் புகைப்படம் எடுத்துள்ளனர். பின்பு அப்புகைப்படங்களை மக்கள் மத்தியில் விநியோகித்துள்ளனர். வஹ்ஹாபிகளின் தொடர்ந்தேர்ச்சியான தொந்தரவுகளால் றிஸ்வி மௌலவி மௌனமாகிவிட்டார். தற்போது அவர் வாழைச்சேனையில் வசிக்கிறார். "ஆரம்பத்தில் நான் சுதந்திரமானவனாக இருந்தேன். ஆனால் தற்போது என் உயிருக்குப் பயப்படுகிறேன்" என்று லக்பிம நியூஸ் பத்திரிகையுடனான தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டார்.
காத்தான்குடியில் இஸ்லாமிய கடும்போக்குவாதிகளுக்கு ஏற்ற சூழ்நிலை காணப்படுகிறது. இந்த வஹ்ஹாபிகள் பல நூற்றாண்டு காலமாக முஸ்லிம்கள் பின்பற்றி வந்தவற்றை இல்லாமல் செய்கிறார்கள். கடும்போக்கான கருத்துக்களைக் கொண்டு முஸ்லிம் இளைஞர்களை கடும்போக்குவாதிகளாக மாற்றுகிறார்கள் என்று மௌலவி றிஸ்வி குறிப்பிட்டதோடு, இந்த வஹ்ஹாபிகள் ஜிஹாதிற்காக தயாராகிறார்கள் என்றும் எச்சரித்தார்.
ஆங்கிலத்தில்: ரங்க ஜயசூரிய
மொழிமாற்றம்: ஹேனேகெதர பழீல்
நன்றி: மீள்பார்வை
0 கருத்துரைகள் :
Post a Comment