July 16, 2011.... AL-IHZAN Local News
மூத்த முஸ்லிம் ஊடகவியலாளரும், முஸ்லிம் மீடிய போரத்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதான ஆசிரியருமான என்.எம். அமீன் இன்று வெளியான அந்த பத்திரிகையில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றமும், தமிழ் முஸ்லிம் உறவும் ‘ என்ற தலைப்பில் தீட்டியுள்ள ஆசிரியர் தலையங்கத்தை இங்கு மீள் பதிவு செய்கின்றோம்: 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் இரண்டு மணித்தியால அவகாசத்தில் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 20 வருடங்களின் பின்னர் தற்போது ஏற்பட்டுள்ள சுமுக நிலை காரணமாக தமது இருப்பிடங்களில் மீண்டும் குடியேறி வருகின்றனர்.
கடந்த 20 வருடங்களாக ஆங்காங்கே சிதறிய நிலையில் சொந்த இருப்பிடம் இல்லாது ‘தமது தாயகமும் வடக்கே’ என்ற உணர்வுடன் வாழ்ந்து வந்த மக்கள் மத்தியில் தற்போது புதுவிதமான நம்பிக்கை ஒளிக்கீற்று வெளிப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் குடியேறியுள்ளனர்.
விரிவாகஇந்நிலை உருவாகக் காரணம் தற்போது நிலவி வரும் அமைதியான சூழ்நிலையாகும். இவ்வாறு குடியேறியுள்ள மக்கள் மீண்டும் அப்பகுதியில் தமது சொந்த வாழ்விடத்தில் குடியேறி வாழக்கிடைத்தமைக்கு பெருமிதம் அடைவதோடு ஏற்கனவே அங்கு வாழ்கின்ற தமிழ் மக்களுடன் பழைய உறவைப் பேணி ஒற்றுமையாக வாழக்கிடைத்தமை குறித்தும் மகிழ்ச்சியடைகின்றனர்.
இலங்கையில் முஸ்லிம்கள் குடியேறி சுமார் 1200 வருடங்கள் பழைமை வாய்ந்த வரலாறு இருந்து வருவது போன்று அதே காலப்பகுதிக்குட்பட்ட வரலாற்றை யாழ் முஸ்லிம்களும் கொண்டுள்ளனர். இவ்வளவு காலமும் அங்கு வாழும் தமிழ் மக்களுடன் சுமுகமான உறவைப் பேணி வருகின்றனர். இந்த உறவு 20 வருடங்களின் பின்னர் மீண்டும் மலர்ந்திருக்கின்றமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக குறிப்பிட முடியும். இந்நிலை தொடர வேண்டும். முன்னர் இருந்ததை விட இந்த உறவு மேலும் பலமடைய வேண்டும்.
சுமார் 20 வருட இடைவெளியின் பின்னர் ஏற்பட்டுள்ள இந்த உறவை மீண்டும் பலப்படுத்த அப்பகுதியில் இன நல்லுறவை வளர்க்கும் வகையிலான நடவடிக்கைகளும் இரு இனங்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். காரணம், முஸ்லிம் கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட போது பிறந்த தமிழ்க் குழந்தைகள் இன்று இளைஞர்களாக உள்ள நிலையில் அவர்களுக்கு இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்தைப் பற்றி எதுவும் தெரியாது. முஸ்லிம்கள் யார்? இஸ்லாமிய மத, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் எவை? எமது சமூக பாரம்பரியங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் எவை என்ற எந்தவிதமான அறிவும் இல்லாத ஒரு நிலையே இருந்து வருகின்றது. இந்த உறவிலான புரிந்துணர்வில் இடைவெளி ஏற்படும் போதே இன ரீதியான முரண்பாடுகளும் சந்தேகங்களும் ஏற்படுகின்றன. அந்த நிலை ஏற்பட இடம் வைக்காது இளம் தலைமுறையினரிடையில் புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அவர்கள் முஸ்லிம்களைப் பற்றி அறிந்துள்ள ஒரே விடயம் ‘சோனி’ என்பதே. அதற்கப்பால் எதையும் அறியாதவர்களாக உள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள உறவை, முன்னர் தமிழரும் முஸ்லிம்களும் ‘பிட்டும் தேங்காய்ப்பூவும்’ போன்று இணைந்து வாழ்ந்தனர் என்ற நிலையை இளம் தலைமுறையினர் மீண்டும் உணரச் செய்ய வேண்டும். அதற்கான திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். பாடசாலை மாணவர்களைத் தொடர்புபடுத்தியதான நிகழ்ச்சிகள், வளர்ந்தோர் மத்தியில் இணைப்பையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகள், கலந்துரையாடல்கள் மற்றும் ஒன்று கூடல்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள கல்விமான்கள், புத்தி ஜீவிகள், உலமாக்கள், மற்றும் தனவந்தர்கள் ஒன்றுபட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அங்கு குடியேறி வியாபாரத்தில் ஈடுபடு கின்றவர்களின் ஒரே இலட்சியம் வியாபாரத்தில் இலபாம் ஈட்டுவது என்பதாக மட்டும் அமையக் கூடாது. வியாபாரம் மூலம் இன நல்லுறவுக்கு பாலம் அமைக்க வியாபாரிகளால் முடியும். அவர்கள் வியாபார நோக்கமாக வருகின்ற ஏனைய இனத்தவர்களோடு புன்முறுவல் பூத்த முகத்தோடு அவர்களை வரவேற்று இனிமையான வார்த்தைகளைப் பேசி சிறந்த முறையில் கருத்துக்களைப் பரிமாறி எமது முன்மாதிரியை வெளிப்படுத்த வேண்டும். நாம் அங்கு மீண்டும் குடியேறியிருப்பது வியாபாரம் செய்யவும் உச்ச இலாபம் பெறவும் மட்டுமே என்ற உணர்வு அந்த மக்கள் மத்தியில் ஏற்பட இடமளிக்கக் கூடாது. அத்துடன் ஹோட்டல் உரிமையாளர்கள் அங்கு நடமாடுகின்ற ஏனைய சமூகத்தவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் விதமாக அதிகாலை 5.00 மணியில் இருந்து இரவு 10.00 மணி வரையில் பெருத்த சப்தத்தில் வானொலிப் பெட்டிகளை இயக்குவது மற்ற மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்துவதாக அமையலாம். இச்செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும்.
யாழ் ஊடகங்களின் பொறுப்பு
இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற ஊடகங்களுக்கும் அங்கு வாழ்கின்ற தமிழர், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினரிடையில் இருந்து வருகின்ற புரிந்துணர்வைப் பாதிக்கின்ற விதமாக முஸ்லிம்களைத் தொடர்பு படுத்தி செய்திகள் தகவல்களை வெளியிடக் கூடாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டிய கடப்பாடு ஊடகங்களுக்கு இருந்து வருகின்றது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ள முஸ்லிம்களில் அதிகமானோர் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குறித்து யாழ்ப் பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளில் அடிக்கடி தவறானதும் ஆதாரமற்றதுமான செய்திகள் வெளியாகின்றன. அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் குறித்து தவறான கண்ணோட்டத்தில் வரையப்பட்ட செய்திகளைப் பத்திரிகைகள் பிரசுரித்திருந்தன. யாழ்ப்பாணத்தில் இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் ரூபா 20 இற்கு ஒரு கிலோ இரும்பைக் கொள்வனவு செய்து தெற்கிற்கு கொண்டு வந்து ரூபா 80 இற்கு விற்பனை செய்வதாக அந்த செய்திகள் கூறுவதாக அமைந்துள்ளன. இந்த செய்திகள் இந்த வியாபாரிகள் மக்களை ஏமாற்றி குறைந்த விலையில் இரும்பைப் பெற்று கொள்ளை இலாபம் உழைக்கின்றனர் என்பது போன்ற கருத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதாக அமைகின்றது.
ஆனால் இதன் உண்மை நிலை என்னவெனில் ஒரு கிலோ இரும்பை ரூபா 20 இற்கு கொள்வனவு செய்தாலும் அதனை கொழும்பிற்கு கொண்டு வருவது வரையில் ஒரு கிலோவுக்கு ரூபா 60 இற்கு மேல் செலவாகின்றதை இப்பத்திரிகைகள் கண்டு கொள்ளாமல் கொள்வனவு செய்கின்ற விலையையும் விற்பனை செய்கின்ற விலையையும் மட்டும் குறிப்பிட்டிருப்பது வேண்டுமென்றே தவறான கருத்தை வழங்க முற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இரும்பு தென்பகுதிக்கு வந்து சேருகின்றது வரையில் ஒரு கிலோவுக்கு அந்த வியாபாரிகள் ரூபா 60 இற்கு மேல் செலவு செய்கின்றனர்.
அத்துடன் இரும்பு வியாபாரத்தில் 50 முஸ்லிம் வியாபாரிகள் அளவில் ஈடுபட் டிருக்கின்ற போதும் அவர்களுக்கு ஆங்காங்கே சென்று பழைய இரும்பை சேகரித்து விநியோகிப்பவர்களாக சுமார் 2000 அளவிலான தமிழர்களே ஈடுபட்டுள்ளனர். அதனால் இந்த வியாபாரம் பற்றி பேசும்போது இரு இனத்தாரும் ஈடுபட்டிருப்பதை ஊடகங்கள் புரிந்துகொள்ளத் தவறியிருந்தமையும் கவலை தருகின்ற விடயமாகும்.
அத்துடன் இந்த இரும்பு வியாபாரத்தை வடக்கிலிருந்து தெற்கிற்கான இரும்புக் கடத்தல் என்று தலையங்கம் இட்டு ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தமையும் கவலை தருவதாய் அமைகின்றது. கடத்தலுக்கும் வியாபாரத்தில் ஒரு இடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதிலும் வேறுபாடுகள் இருப்பதை புரிந்துகொள்ளாமல் செய்தி எழுதப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இவ்வாறான செய்திகள் மக்கள் மத்தியில் தப்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்துவதோடு அவை இன ரீதியான முரண்பாடுகளுக்கும் சந்தேகங்களுக்கும் வழிவகுக்கலாம்.
ஊடகங்கள் எப்போதும் மக்களுக்கு தகவல்களை வழங்குவதாக இருப்பதோடு அவை நடுநிலைப் பார்வையுடனும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமலும் ஆதாரபூர்வமானதாகவும் அமையவேண்டும் என்பது ஊடக தர்மத்தின் அடிப்படையாகும். செய்திகள் தகவல்களால் மக்கள் தவறான வழிக்கு இட்டுச் செல்லக் கூடாது. அத்துடன் குரோத உணர்வுடன் செய்திகள் தகவல்களை எழுதும் கலையை சமூகம் ஒருபோதும் மதிநுட்பமான ஊடக செயற்பாடு என்று ஏற்றுக் கொள்வதில்லை. ஆதலால் யாழ்ப்பாணத்தில் தமிழ் முஸ்லிம் உறவைப் பலப்படுத்துவதில் அங்கிருந்து செயற்படுகின்ற ஊடகங்களின் பங்களிப்பும் இன்றியமையாததாகும்.
0 கருத்துரைகள் :
Post a Comment