ரமழான் மாதத்தில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் விடுமுறையை ரத்து செய்வது தொடர்பாக கடந்த மாதம் தொடக்கம் முஸ்லிம் அரசியல் வாதிகள் மத்தியில் இழுபறிநிலை தோன்றியுள்ளது. இது தொடர்பாக சமூக, இஸ்லாமிய சிந்தனையாளரும், ஜாமியா நழீமியா கலாபீடத்தின் பிரதி பணிப்பாளரும், அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் உபதலைவருமான அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத்தை தொடர்பு கொண்டு lankamuslim.org வினவியபோது அவர் ‘இந்த விடயம் ரமழான் மாதத்தில் முஸ்லிம் பாடசாலைகளை நடத்துவதா, இல்லையா என்பதுடன் மாத்திரம் சமந்தப்பட்ட ஒரு விவகாரம் மட்டுமல்ல. இதை பல கண்ணோட்டங்களில் ,பல கோணங்களில் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.’ என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த விடயத்தில் அவசரப்படாமல் நிதானமாக நின்று மாணவர் மட்டம் , ஆசிரியர், அதிபர் மட்டம், உள்ளடங்களாக சமூக தலைமைகள், கல்வியாளர்கள், உலமாக்கள் மட்டம் ஆகிய மட்டங்களில் இதன் சாதக பாதகங்கள் பார்க்கப்படவேண்டும். பல சதாப்த காலமாக நாம் அனுபவித்து வந்த ஒரு உரிமை என்றவகையிலும்...
இந்த விடையம் பார்க்கப்படவேண்டும். இவ்வாறு பல மட்டங்களிலும், பல கோணங்களில் ஆராயப்பட்டு இறுதியில் இதற்கு நல்ல நிலைப்பாடு ஒன்றை எடுப்பதுதான் பொருத்தமானதாகும். என்று அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் 29 ஆம் திகதி இது தொடர்பாக கல்விமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் முஸ்லிம் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , மற்றும் முஸ்லிம் அரசியல் வாதிகள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர். விடுமுறையை ரத்து செய்வது தொடர்பான கருத்துகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துகளை முன்வைத்தபோதும் பெரும்பாலான முஸ்லிம் அரசியல்வாதிகள் இதற்கு தமது கடுமையான எதிர்ப்பை காட்டியதாள். இந்த தீர்மானம் கைவிடப்பட்டதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்திருந்தார். என்று தகவல்கள் வெளியாயின .
இந்த நிலையில் நோன்பு காலத்தில் முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை ரத்துச்செய்யப்படும் தீர்மானம் இதுவரை கைவிடப்படவில்லையெனவும், அதுதொடர்பில் தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருவதாகவும், நோன்பு காலத்தில் முஸ்லிம் பாடசாலைகள் இயங்க வேண்டுமா ? என்பதை அறிவதற்காக பாடசாலை மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு நடைபெறவுள்ளது. என்றும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ள கருத்தில். எமது மாணவர்களுக்கு கூடுதலான விடுமுறைகள் கிடைப்பதனாலேயே கல்வித் துறையில் நாம் பின்னடைந்துள்ளோம் இதேவேளை அடுத்த சிறுபான்மையினரான தமிழ் சமூகம் கல்வியில் பெரும் அபிவிருத்தியைக் கண்டுள்ளமையை எமது அரசியல்வாதிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் பெற்றோர்கள் மத்தியில் நடாத்திய ஆய்வில் பெரும்பாலானோர் இத்திட்டத்திற்கு ஆதரவினைத் தெரிவித்துள்ளார்கள். என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிறுவர் நலன், மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கருத்துரைக்கையில் நோன்பு கால விடுமுறையை இரத்துச் செய்யும் திட்டத்தின் நன்மை தீமைகள் ஆராயப்பட வேண்டும். இது விடயத்தில் அரசியல் கலப்பிருக்கக் கூடாது.
இத்திட்டம் தொடர்பான ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முன்னெடுப்பதே சிறந்தது. இந்த உரிமை 1942 ஆம் ஆண்டிலிருந்து நாம் அனுபவித்து வரும் உரிமையாகும். முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பேசும்போதும் மாற்றங்களைச் செய்யவிளையும் போதும் அது பொதுவாக கலந்துரையாடப்பட வேண்டும். அவ்வாறு கலந்துரையாடப்பட்டாலே சுமுகமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி நோன்பு கால விடுமுறையை இரத்துச் செய்ய முயற்சிப்பது எமது தனித்துவ உரிமைகளில் கைவைக்கும் முயற்சியாகும். இது பெரும்பான்மை சமூகத்துக்கு துணை போகிறவர்களின் செயல் என தெரிவித்துள்ளார் .
0 கருத்துரைகள் :
Post a Comment