June 10, 2011.... AL-IHZAN World News
இந்த மாத(ஜூன் ) இறுதியில் காஸாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களைக் கொண்டு செல்லும் ஃப்ரீடம் புளோடில்லா- 2 குழுவுக்கு ஆபத்து ஏதேனும் நேர்ந்தால் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கி-மூன் அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்" என காஸா முற்றுகைக்கு எதிரான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
அண்மையில், காஸா கடற்பரப்பை முற்றுமுழுதாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இஸ்ரேலுடன் ஏற்படக்கூடிய பிரச்சினையைத் தவிர்க்குமுகமாக ஃப்ரீடம் புளோடில்லா- 2 குழுவினரை இப்பயணத்தில் இருந்து தடுத்துநிறுத்த உதவுமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் மத்தியதரைக் கடலை அடுத்துள்ள நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்....
"பான்-கி-மூனின் இந்தக் கோரிக்கையானது ஃப்ரீடம் புளோடில்லா- 2 மீது தாக்குதல் நடாத்த இஸ்ரேலை ஊக்குவிப்பதாகவும், அதன் கடற்கொள்ளையை நியாயப்படுத்துவதாகவுமே அமைந்துள்ளது" என்று மேற்படி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
"கடந்த வருடம் காஸாவை நோக்கிச் சென்ற புளோடில்லா-1 குழுவை சர்வதேச கடற்பரப்புக்கள் வைத்து காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, ஒன்பது மனிதாபிமானச் செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்ததோடு, மேலும் பலரை படுகாயமடையச் செய்தது."
"இஸ்ரேலிய அடாவடித்தனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான இத்தகைய கோரிக்கைகள், சர்வதேச சட்டத்துக்குப் புறம்பானதாகும். சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக அப்பாவிப் பலஸ்தீன் மக்களைத் துன்புறுத்தும் நியாயமற்ற காஸா முற்றுகையைத் துரிதமாக முடிவுக்குக் கொண்டு வருவதில் ஐ.நா.வும் முன்வர வேண்டும்" என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
"ஐரோப்பிய நாடுகளில் இருந்து புறப்படவுள்ள சுமார் 12 கப்பல்களில், ஐரோப்பிய நாட்டு அரசியல் பிரமுகர்கள் உட்பட சுமார் 1200 தன்னார்வலர்கள் பங்கேற்கவுள்ளனர்" என மேற்படி அமைப்பு அறிவித்துள்ளது.
காஸா முற்றுகைக்கு எதிரான சர்வதேச அமைப்பு தன்னுடைய அறிக்கையின் இறுதியில், "மேற்படி பயணத்தில் பங்கேற்க உள்ளவர்கள் ஓர் உன்னதமான மனிதாபிமானப் பணிக்காகக் களமிறங்கியுள்ளனர். எனவே, அவர்களை அதிலிருந்துப் பின்வாங்கச் செய்யும் வகையில் அச்சுறுத்தல் விடுப்பதற்குப் பதிலாக, உரிய பாதுகாப்பும் ஊக்கமும் வழங்குவதே ஐ.நா. செயலாளர் நாயகம் போன்ற பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒருவருக்குத் தகுதியான செயலாகும்" என்று குறிப்பிட்டுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment