animated gif how to

வடக்கு, கிழக்கில் தொடர்ந்து அடைமழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

January 07, 2011 |

January 07, 2011.... AL-IHZAN Local News

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் அடங்கலாக சில மாவட்டங்களில் அடைமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக எமது பிரதேச நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
அடைமழை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அவ்வாறான வீதிகள் ஊடான வழமையான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் விரிவாக
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்க ளில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை காரணமாக பாடசாலைகளுக்கு மாணவர்க ளின் வருகையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை மூடுவதற்கான அதிகாரத்தை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம். நிஷாம், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளார்.
நிவாரணம்
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சு உலக உணவுத் திட்டம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் என்பன இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களை வழங்குகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ள 65000 பேருக்கு இவ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
நான்கு நாட்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் இதில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு மற்றும் பொத்துவில் குண்டுமடு ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சீனித்தம்பி செல்வராசா பலவித உதவிகளை நல்கினார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வெ. ஜெகதீஸன், கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் முன்னிலையில் ஆலையடிவேம்பு வெள்ள அகதி மாணவர்க்கு அப்பியாசக் கொப்பிகள், பென்களை உறுப்பினர் செல்வராசா வழங்கிவைத்தார். பெரியகுளம், வாச்சிக்குடா, கோளாவில் பிரதேச வெள்ளப்பாதிப்பு மாணவர்கள் 300 பேருக்கு இவ்வுதவிகளை திங்களன்று வழங்கிவைத்தார்.
மேலும் 100 வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி ஷ¤ஹாதா நகர் வாழ் மக்களுக்கு காத்தான்குடி ஷ¤ஹாதா சமூக சேவை அமைப்பு சமைத்த உணவுகளை வழங்கியதாக இவ் அமைப்பின் செயலாளர் எம்.ஏ.ஏ.எம். அப்துல் வதூத் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 166ஏ, 165 வீ கிராம சேவையாளர் பிரிவில் வாழும் 388 குடும்பங்கள் மழை வெள்ளம் காரணமாக வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளமையினால் காத்தான்குடி ஷ¤ஹாதா சமூக சேவை அமைப்பின் தலைவர் எச்.எம்.எம். ஜாபீர் தலைமையில் சமைத்த உணவு வழங்கப்பட்டதுடன், உலர் உணவு நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டம்
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திலுள்ள பெரியநீலாவணை, துரைவந்தியமேடு, பாண்டிருப்பு, மருதமுனை, கல்முனை,  சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டப்பள்ளம், ஒலுவில், அட்டாளைச்சேனை உள்ளிட்ட பல கிராமங்கள் வெள்ள அபாயத்திற்கு ஆளாகியுள்ளன.
கல்முனை மாநரகத்தையும், நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதிக்கு மேலாக மூன்று அடிக்குமேல் தண்ணீர் கரைபுரண்டு போவதாலும், இத் தாம்போதி புனரமைப்புப்பணி மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்ட அணைக்கட்டு சேதமடைந்துள்ளமையால் பொதுமக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலை உள்ளது.
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள திராய்க்கேணித் தமிழ்க் கிராமம் வெள்ளத்தில் மூண்டுள்ளது. திராய்க்கேணியில் உள்ள 130 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 20 வீடுகள் முற்றாக வெள்ளத்தில் அமிழ்ந்திருப்பதாகவும் கிராம சேவை அதிகாரி கூறினார்.
அங்குள்ள ஒரேயொரு பாடசாலையில் அகதி மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். 75 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 பேரே இவ்விதம் தங்கியுள்ளனர்.
சம்மாந்துறை
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் 2257 குடும்பங்களைச் சேர்ந்த 9006 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ. மன்சூர் தெரிவித்தார்.
மருதமுனை
அடைமழை காரணமாக மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயம் நீரில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாகப் பாடசாலை நடைபெறவில்லை. வகுப்பறைகள் நீரில் மூழ்கியுள்ளன. அதிபர் அறையில் மூன்று அடிக்கு மேல் வெள்ள நீர் நிறைந்துள்ளது.
வெள்ள நீர் நிறைந்துள்ளதை அறிந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. தெளபீக், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜெலீல், உதவிக் கல்விப் பணிப்பாளர் அப்துல் சக்காப் உள்ளிட்டோர் நேற்று பாடசாலைக்கு வருகை தந்து நிலைமையைப் பார்வையிட்டதோடு நீர்வழிந்தோடுவதற்கான வேலைத்திட்டம் ஒன்றையும் ஆரம்பித்து வைத்தனர்.
(புதிய காத்தான்குடி தினகரன், காத்தான்குடி தினகரன், புதிய காத்தான்குடி விசேடம், காரைதீவு குறூப், துறைநீலாவணை, மாளிகைக்காடு குறூப், சம்மாந்துறை குறூப் நிருபர்கள்)- தினகரன்

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!