animated gif how to

சமூக நீதியினை நிலைநாட்டுகின்ற கடமையினை செய்யாதவரை முஸ்லிம் சமூகம் சீர்பெறமுடியாது – பொறியியலாளர் எம்.எம்.ஏ. அப்துர்றஹ்மான்

August 26, 2010 |

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் செயலாளாரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் எம். எம். ஏ. அப்துர்றஹ்மான் அவ் இயக்கம் நடாத்திய இப்தார் நிகழ்வில் உரையாற்றும் போது இது ரமழான் காலம் என்பதால் நம் மத்தியில் ஆன்மீக உணர்வும் தேடலும் அதிகரித்து காணப்படுவது இயல்பானது, அதிலும் குறிப்பாக இது போன்ற நோன்பு திறக்கின்ற வேளைகளில் மிகைத்த ஆன்மீக உணர்வோடு இறைவனின் மன்னிப்புக்காகவும் அவனது நற்கூலிக்காகவும் நாம் ஆவல் கொணடிருப்பதும் இயல்பானதே. ஆனாலும் நம் மத்தியில் இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்கைத்திட்டம் என நாம் வாயாற் பேசிக்கொண்ட போதிலும் அதனை செயல்படுத்துவதில் அதிகம் அக்கறை காட்டுவதில்லை என தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய பொறியியலாளர் எம்.எம். ஏ. றஹ்மான்;  தொழுகை, நோன்பு , மற்றும் சுன்னத்தான வணக்க வழிபாடுகள் போன்ற ஆன்மீக நடவடிக்கைகள் மாத்திரமே நமது கடமைகள் என்றும் அவை மாத்திரமே இறைவனின் முழுமையான திருப்தியையும் நற்கூலியையும் பெற்றுக்கொள்வததற்கு போதுமானவை என்றும் நாம் துரதிஷ்ட வசமாக நம்பிக்கொண்டிருக்கிறோம் விரிவாக பார்க்க
ஆனால் அல்குர்ஆனிய பின்னனியில் பார்க்கின்ற போது இஸ்லாத்திற்கு பூரண நடைமுறை வடிவம் கொடுத்தல் என்ற அம்சத்தில் சமூக நீதியையும் , தர்மத்தையும் , சமத்துவத்தையும் நிலை நாட்டுதல் என்பது எவ்வளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு சில உதாரணங்களை சொல்ல முடியும்.
அல்குர்ஆனை ஆராய்கின்ற போது தொழுகையை பற்றி வலியுறுத்துகின்ற இறை வசனங்களில் பெரும்பாலானவை ஸகாத் எனும் ஏனைய வரியினைப்பற்றியும் வலியுறுத்திப் பேசுவதை பார்க்கின்றோம். ஏனெனில் இஸ்லாம் தொழுகை என்கிற ஆன்மீக செயற்பாடோடு மாத்திரம் ஒரு முஸ்லிம் தனது கடமையை நிறுத்திக்கொள்ளாமல் ஸகாத் எனும் ஏழை வரியினை அமுல்படுத்துவதன் மூலம் இந்த பூமியில் சமத்துவமான பொளாதாரப் பங்கீட்டின் மூலம் வறுமையை ஒழித்து அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தவர்களாக அனைவரும் வாழவேண்டும் என்கிற சமூக நீதியினை நிலைநாட்ட வேண்டும் என பணிக்கிறது.
அது போலவே இறை மார்க்கத்தை பொய்ப்பிப்பவர்களின் பண்புகள் பற்றி கூறும் இஸ்லாம் அவர்கள் அனாதைகளுக்கு உணவளிக்க மாட்டார்கள் , மற்றவர் உணவளிப்பதை தூண்டவும் மாட்டார்கள் எனவும் கூறுகிறது. எனவே அநாதைகளை பராமறித்தல், அவர்களின் நலன்களை பாதுகாத்தல் போன்ற விடயங்களில் பாராமுகமாக இருப்பது என்பது மார்க்கத்தையே நிராகரிக்கின்ற செயல்முறையாகும் என்கின்ற அளவுக்கு சமூக நீதியினை நிலைநாட்டுவது முக்கியத்வம் பெறுகின்றது.
இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் அல்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள இறைசட்டங்களில் கிட்டத்தட்ட 65% க்கும் அதிகமானவை சமூக நீதியினை நிலைநாட்டுவதற்கு வழிகாட்டி அதனை வழியுருத்தும் சட்டங்களாகவே இருக்கின்றன என இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர்.
எனவே சமூக நீதியினை நிலைநாட்டுகின்ற கடமையினையும் செய்யாதவரை முஸ்லிம் சமூகம் சீர்பெறமுடியாது. இறைவனின் முழுமையான திருப்தியினையும் பெற்றுக்கொள்ளவும் முடியாது இந்த இடத்தில் தான் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் முன்வைக்கும் சிந்தனைகள் நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டங்கள் என்பன இஸ்லாமியப் பார்வையில் தட்டிக்கழிக்க முடியாத கடமையாகவும் பொறுப்பாகவும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கிறது.
நமதூரைப் பொறுத்தவரையில் 100% முஸ்லிம்கள் வாழுகின்ற ஒரு நகரம். நூற்றுக்கனகான உலமாக்கள் அதிக எண்ணிக்கையான பள்ளிவாயல்கள், மார்க்கம்போதிக்கும் பல்வேறு மத்ரஸாக்கள், முற்போக்கான பல்வேறு தஃவா அமைப்புகள் மற்றும் சமூக தலைமைத்துவத்தினை வழங்கும் சம்மேளனம் என பல்வேறு தனித்துவங்களை பெருமைக்குரியவையாக நாம் அடிக்கடி பேசிக் கொள்கின்றோம். ஆனால் துரதிஷ்ட வசமாக நாம் பெறுமை கொள்ளும் இந்த வெளித் தோற்றல்களுக்குப்பின்னால் நடந்து கொண்டிருக்கின்ற சமூக அநீதிகளும் அதிகாரத் துஷ்பிரயோகங்களும் ஊழல் மோசடிகளும் ஒழுக்க கேடுகளும் அத்தோடு பலவீனமானவர்களினதும், ஏழைகளினதும் உரிமைகள் அதிகாரம் கொண்டோரால் பறிக்கப்படுவதும் ஏராளமாக நடந்து கொண்டிருகடகின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நம் அப்றா பகுதியில் வீடு வீடாகச் சென்று நடத்திய கணக்கெடுப்பின் போது அந்த மக்களின் உரிமைகள் பரிக்கப்பட்டுள்ள நிலமைகளையும், அவர்களின் பெயரால் கிடைக்கப்பெற்ற பொது நிதிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள பயங்கர நிலமைகளையும் நாம் அறிந்து கொண்டோம்.
சுனபமியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து முழுமையான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளாமல் நாளாந்தம் இவ் ஏழை மக்கள் வருந்திக்கொண்டிருக்கின்ற நிலையில் இம்மக்களுக்காக குவைத் அரசாங்கத்தின் அன்பளிப்பாக கிடைத்த வீடுகளில் கணிசமானவை அரசியல்வாதி ஒருவரின் அடிவருபுனளினால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இவ் வீட்டுத்திட்டத்தை அமைப்பதற்காக காணிகளை வழங்கிய நபர்களிடமிருந்து பலாத்காரமாக குறைந்த செலவில் கையொப்பங்களை வாங்கி இவ் அரசியல் கும்பலை தமது பெயருக்கு காணிகளை மாற்றிக்கொண்டு அதற்கான பாரிய நஷ்டஈட்டினையும் மோசடியான முறையில் பெற்றுக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.
இது பற்றிய விரிவான விசாரனை ஒன்றை நடாத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினை வழங்குமாறு சம்மேளனத்திடம் நாம் விடுத்த கோரிக்கைகளை ஏற்று அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்பட்ட போது குறிப்பிட்ட அரசியல் கும்பலினால் அச்சுறுத்தப்பட்டு பகிரங்கமாக இம்சிக்கப்பட்டார்கள். சம்மேளனத்தை அடித்து நொருக்குவோம் என்றும் அச்சுருத்தினார்கள்.
இந்த அதர்மங்களைப் புரிவதற்கு இவர்களுக்கு எங்கிருந்து அதிகாரம் கிடைத்தது. யாருடைய தயவில், அடைக்கலத்தில் இருந்து கொண்டு இதனைச் செய்து கொண்டிருக்கிறார்கள்? நமது மக்கள் வழங்கிய வாக்குகளின் மூலமாக கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு நமது மக்களுக்கே அநீதி இழைக்கின்ற இச் சமூக விரோத சக்திகளை தண்டிப்பது நமது சமூக கடமையாகும்.
சமூக நீதியினை நிலைநாட்ட வேண்டும் என்ற இஸ்லாமிய பார்வையின் அடிப்படையில் இது நமது மார்க்க கடமையாகும். என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் பெண்களுக்கும் இப்தார் நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:-காத்தான்குடிஇன்போ

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!