-மூதூர் முறாசில்-
புனித
நோன்பு காலத்தில் மாகாண சபைக்கான ‘தேர்தல்
காலமும்’ சங்கமித்து விட்டது. இருந்தபோதும் பெருநாளுக்கும் தேர்தல்
தினத்திற்கும் இடையில் சுமார் 20 நாட்கள்
போதிய இடைவெளியும் இருக்கின்றது. இதனால் நோன்பு காலத்தில் தேர்தலும் வந்துவிட்டதே, என்ன செய்வது… என்று
ஈமானிய இதயங்கள் சங்கடப்படாது திட்டமிட்டுச் செயற்படலாமல்லவா..?
கடந்த முறை நோன்பு காலத்திற்குள் புகுந்த ‘கிறீஸ்’ சாத்தான்களின் அட்டகாசத்தினால் நோன்பாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். திக்ர், தியானம், இரவு நேரத்தொழுகையோடு சிலர் நோன்பு நோற்பதிலும் கூட தடங்கல்களை அனுபவித்தனர். அடி, உதை, வெடி… என சிக்கல்களும் ஏற்பட்டன.
இம்முறையோ
நோன்பு காலத்து ‘அமல்களுக்கு’காரணம் கூறும் வகையில் சிலருக்கு தேர்தல் வேலைகள் வந்துள்ளன.
தேர்தல் என்பது எல்லோருக்கும் போல் முஸ்லிம்களுக்கும் முக்கியமானதுதான். இதில்
வேறுபட்ட கருத்துக்கு இடமில்லை. ஒரு முஸ்லிமைப் பொருத்தமட்டில் ஏனைய கருமங்களைப்
போல் தேர்தலுக்கான பங்கெடுப்புக்களும் இஸ்லாம் வகுத்தளித்த வழிமுறையில் இடம்பெறுகின்ற
போது அவை ‘இபாதத்’ ஆகும். அதற்கான நல்ல கூலிகளும் அல்லாஹ்விடம் உண்டு.
ஆனால்
இஸ்லாமிய வழிகாட்டலிலிருந்து விலகி ஏனைய சமூகத்தினரைப் போல தேர்தல் சம்பந்தமான
செயற்பாட்டில் முஸ்லிம்கள் பங்கெடுப்பார்களெனில் அதுவும் இந்த அருள் சுரக்கும்
ரமழானில் இடம்பெறுமாக இருந்தால் கடந்த முறை உருவெடுத்த ‘கிறீஸ்’ சாத்தான்களை விடவும் பெரிய சாத்தானாக அது மாறிவிடும். நன்மைகளுக்கு
பதிலாக தீமைகளைக் கொட்டிக் குவித்து விடும்.
பொதுவாக
அரசியல் அரங்கில் பிரவேசிப்போர் தன்னையும் தான் சார்ந்த கட்சியையும் சிகரம் வரை
உயர்த்தி மாற்றுக்கட்சிகளை தாராளமாய் தாழ்த்தி- வீழ்த்தி சொற்போர் நடத்துவதும்
பிரசுரங்கள் வெளியிடுவதும் சுவரொட்டிகள் ஒட்டுவதும் தனது வெற்றியை கருதி எதனையும்
செய்யத்துணிவதும் சகஜமாக இடம்பெறுவதைப் பார்க்கின்றோம்.
முஸ்லிம்களிலும்
பெரும்பாலானோர் இவ்வாறு ஏனைய சமூகத்தினரைப் போலவே அரசியல் செயற்பாட்டிலும்
ஈடுபட்டு வருகின்றனர். இஸ்லாம் பற்றிய அறிவும் குறிப்பாக இஸ்லாம் விதந்துரைக்கும்
பண்பியலும் ஓழுக்கவியலும் இல்லாதவர்களாவோ அல்லது அவற்றைப் பின்பற்றாதவர்களாகவோ
இருந்து வருகின்றனர் என்பது கவலைக்குhpய
விடயமாகும்.
சொல்லப்போனால்
அடிப்படை கடமையான தொழுகையை எடுத்துக் கொண்டால் ஐந்து நேரத் தொழுகையில் அனைத்தையும்
உரிய நேரத்தில் ஜமாத்துடன் தொழும் முஸ்லிம் அரசியல் வாதிகளை அரிதாகவே காணக்
கூடியதாக இருக்கின்றது. பெரும்பாலானவர்கள் தொழுகின்றார்களா என்பதுகூட
அல்லாஹ்வுக்குத்தான் வெளிச்சம். ஆனால், பெரும்பாலான
முஸ்லிம் அரசியல் வாதிகள் தொழுகையைக் காட்டிலும் நோன்பு நோற்பதில் ஆர்வம்
செலுத்துவதை அவதானிக்க முடிகிறது.
இஸ்லாம்
யுத்தம் முதலான அவசர நிலைமைகளில் கூட தொழுகையை நேரத்திற்கு நிறைவேற்றுவதை கற்றுக்
கொடுத்துள்ளது. எவருக்கும் தொழுகையை விடுவதற்கு எந்தவோர் அனுமதியையும் இஸ்லாம்
வழங்கவில்லை.முக்கியமாக தொழுகையைக் கொண்டே ஒருவருக்கு முஸ்லிம் என்ற அடையாளத்தை
இஸ்லாம் வழங்குவதற்கு முனைகிறது. எனவே, முஸ்லிம்
என்றால் அவர் நேரம் தவறாமல் ஆயுள் முழுதும் தொழுதுதான் ஆக வேண்டும்.
இங்கு
நான் கூறவந்த விடயம் என்னவென்றால் இப்புனிதமான நோன்பு காலத்தில் மிகுந்த
அவதானத்துடன் நிறைந்த நல்லமல்களைப் புரிந்து, மறுமையில்
உயர்ந்த பேறுகளை அடைந்து கொள்வதற்கு முஸ்லிம்கள் அனைவரும் உறுதியுடன்
செயற்படவேண்டும் என்பதேயாகும்.
மாறாக
மாகாணத் தேர்தலை ஒரு காரணம் காட்டி நல்லமல்களை செய்யாது ஒத்திப் போடுவதற்கு எவரும்
முனையக்கூடாது. நோன்பு கால விசேட கிரிகைகளுக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில்
எந்தவோர் அரசியல் செயற்பாட்டாளரும் ஈடுபடாது இருத்தலை உறதிப்படுத்திக் கொள்ள
வேண்டும். கலந்துரையாடல்கள், கூட்டங்கள் முதலானற்றை தவிர்த்துக் கொள்வதற்கு ஈமானிய உள்ளங்கள்
முயற்சிக்க வேண்டும்.
(இக்குறிப்பினை
நான் எழுதுவதற்குக் காரணம் தலைப்பிறையன்று (நேற்று) நடந்த சம்பவமேயாகும். நோன்பு
ஆரம்பமாகும் உளப்பூரிப்பில் எனது தூரத்து நண்பருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
இரவு நேர அமல்கள் சம்பந்தமாக பேசுவதற்கு ஆசைப்பட்டேன். நான் பேசும் போது இரவு 7.00 மணி இருக்கும். அப்போது அவர் அரசியல்
கலந்தரையாடலொன்றில் சிக்கி விட்டதாகவும் இன்னும் மஹ்ரிப் தொழுகையை தொழுவதற்கும்
முடியவில்லை என்று கூறி கலந்துரையாடலை இடையில் முறித்து தொழுவதற்காகச்
சென்றிருந்தார். ஏனையவர்களின் நிலைமையோ…?)
இங்கு
அதிகாரமற்ற ஓரு மாகாணசபையில் ஒரு உறுப்பினராக அல்லது உச்சகட்டம் ஓரு அமைச்சராக
வருவதற்கு இலக்கு வைத்து பேர் இறைவன் அல்லாஹ்வை தானும் தொழாது ஏனையவர்களையும்
தொழவிடாது இப்புனிதமான காலத்தில் கலந்துரையாடலொன்றை செய்வதென்பது எவ்வளவு இழிவான
மோசமான செயலென்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
நமது
முன்னைய ஈமானிய சமூகத்தினர் ரமழான் மாதம் வருவதற்கு பல பாதங்களுக்கு முன்பிருந்தே
ரமழானுக்கான தயாரிப்பில் ஈடுபாடு செலுத்துவதிலும் ரமழானை அடைவதிற்கு
அருள்புரியுமாறு அல்லாஹ்வை இறைஞ்சுவதிலும் ஈடுபட்டார்கள். அதேபோல் நோன்பு மாதம்
முடிந்ததும் தாம் நோன்பு காலத்தில் புரிந்த நல்லமல்களை அங்கீகாரித்துக் கொள்ளுமாறு
பல மாதங்கள் வரை அல்லாஹ்விடம் வேண்டுபவர்களாகவும் இருந்துள்ளார்.
அனால்,நமது நிலை எவ்வாறு இருக்கின்றது… மனதில்
கை வைத்துக் கேட்போம். சகோதரர்களே, இம்மாதத்தினை
முழுமையாக அடைந்து கொள்வதற்கு உங்கள் ஆடைகளை வரிந்து கட்டிக்கொண்டு வாருங்கள!
சுவனத்தை நோக்கி வெற்றி நடை போடுவோம்!!
0 கருத்துரைகள் :
Post a Comment