தகவல் - முயிஸ் வஹாப்தீன்
பிரதித் தலைவர் சர்வதேச இளைஞர் பாராளுமன்றம்
தம்புள்ள பள்ளிவாசல்
விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு அதன் இருப்பையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தா
விட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித
உரிமை பேரவை மாநாட்டில் அது தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை
எடுக்கும் என்று ஜெனீவாவை தலைமையகமாக
கொண்டு 36 நாடுகளில் குறிப்பாக
இளைஞ்சர்களை வலுவூட்டும் சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும்
கூறியதாவது; " தம்புள்ள
பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தை எமது
சர்வதேச இளைஞர் பாராளுமன்றம்
வன்மையாக கண்டிக்கிறது. மத ரீதியான
அடிப்படை உரிமை ஒன்றில் கை வைப்பதானது
எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய
விடயமல்ல. அதேவேளை இந்த மஸ்ஜித்
தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம்
காத்திரமான நடவடிக்கை எதனையும்
மேற்கொள்ளாதிருப்பதானது மிகவும்
கவலைக்குரிய விடயமாகும்.
ஒரு நாட்டின் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் அந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகத்தினரையும் அவர்களது சமய ரீதியான உரிமைகளையும் பாதுகாபதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கா விட்டால் அது ஒரு பாரதூரமான குற்றமாகும் என்பதை நாம் வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கின்றோம்.
மஸ்ஜிதை தாக்கியோர் கண் முன்னே இருந்தும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கப்படாதிருப்பதானது இந்நாட்டு சட்டத்தையும் நல்லாட்சியையும் கேள்விக்குட்படுத்துகின்றது. அது மாத்திரமல்லாமல் பேரின சமூக மத குருக்கள் சிலரின் அட்டகாசத்திற்கு அடி பணிந்து மற்றொரு சமூகத்தின் வணக்கஸ்தலத்தை அகற்றுமாறு அரசாங்கத்தின் பிரதமரே உத்தரவிட்டிருப்பதானது இந்நாட்டில் சிறுபான்மையின மக்களும் அவர்களது உரிமைகளும் மற்றும் அபிலாசைகளும் அரசாங்கத்தினாலேயே சிதைக்கப்படும் ஆபத்து உள்ளதைப் பறை சாற்றுகிறது.
சிறுபான்மையினர் மீதான இலங்கை அரசின் இத்தகைய அத்துமீறல்களும் பலாத்காரங்களும் களையப்பட வேண்டும் என்று ஜெனிவா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சூடு ஆற முன்பே முஸ்லிம்களின் பூர்வீக பள்ளிவாசல் தாக்கப்பட்டது மட்டுமல்லாமல் அதனை அகற்றுமாறு பிரதமரே உத்தரவிட்டுள்ளமையானது இலங்கை அரசுக்கு சர்வதேச மட்டத்தில் இன்னும் நெருக்கடியையே உண்டு பண்ணும் என்பதோடு ஜெனிவாவில் கை கொடுத்து உதவிய அரபு முஸ்லிம் நாடுகளின் ஆதரவையும் இழக்கச் செய்யும் என சுட்டிக் காட்டுகின்றோம்.
ஆகயினால் தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு அதன் பாதுகாப்பை உறுதிபடுத்துவதோடு அதன் நிரந்தர இருப்புக்கும் உத்தரவாதமளிக்க வேண்டும். இல்லா விட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவை மாநாட்டில் அது தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்பதைக் கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment