animated gif how to

தம்புள்ள மஸ்ஜித் - முஸ்லிம்கள் ஹர்த்தால் செய்வதாயின் வரம்பு மீறாமல் செயற்படுங்கள் ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

April 25, 2012 |

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலையடுத்து முஸ்லிம்கள் மிகுந்த கவலையிலும் சமூக ஒற்றுமை சீர்குலைந்து விடுமோ என்ற அச்சத்திலும் இருந்து வருகின்றனர். சிலர் மேற்படி விடயத்தை கண்டிக்கவும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று தூண்டிக் கொண்டும் இருக்கின்றனர்.

இந்நிலையில் இஸ்லாம் காட்டிய வழிமுறையொன்று இருக்கிறது என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நினைவூட்ட விரும்புகிறது.


பிரார்த்தனையே ஒரு முஸ்லிமின் ஆயுதம் என்ற அடிப்படையில் துஆக்கள், தௌபா, இஸ்திஃபார், சுன்னத்தான நோன்புகள் ஆகியவற்றை கடைப்பிடிக்குமாறு வேண்டிக் கொள்ளும் அதேநேரம் சட்டரீதியாகவும் ஒழுங்காகவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறது.

கண்டனங்களை உரிய இடங்களுக்கு எத்தச் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் ஒவ்வொருவரும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதோ, சாலை மறியல்களில் ஈடுபடுவதோ, வீதிப் போக்குவரத்துக்கு குந்தகம் விளைவிப்பதோ கூடாது. அதேநேரம் ஒட்டு மொத்தமாக எம்மோடு இணங்கி நடக்கும் பௌத்த சகோதரர்களது மனம் புண்படுமாறு நடந்துகொள்ளவும் கூடாது.

அவ்வாறே எமது பள்ளிவாசலைத் தாக்கினார்கள் என்பதற்காக மதங்களைத் தூற்றுவதை தவிர்ப்பதுடன், நடுநிலைமையானவர்களோடு நன்முறையில் நடந்து அவர்களது உள்ளத்தையும் நாம் வென்றிட வேண்டும். இது 'நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் இறைவன் என அழைக்கிறார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள்' என்ற அல்குர்ஆனின் அறிவுரையாகும்.

ஒரு சிலர் பள்ளிவாசல் விடயத்தில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார்கள் என்பதற்காக முஸ்லிம்களாகிய நாம் அவ்வாறு நடந்து கொள்ள முடியாது. எமக்கென இஸ்லாம் கூறியுள்ள வரையறைகளைப் பேணி நடந்து கொள்ளவே சகல முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அழைக்கும் அதேவேளை, ஜம்இய்யத்துல் உலமா ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்காத போதிலும் ஹர்த்தாலில் ஈடுபட விரும்புவோர் இஸ்லாமிய ஒழுங்குகளைப் பேணி நடக்க வேண்டுமெனவும் வரம்பு மீறும்போது ஏற்படும் விபரீதங்களையிட்டும் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறது.


எதிர்வரும் வியாழக்கிழமையன்று நோன்பு நோற்று வெள்ளிக்கிழமை ஜுமுஆவுக்கு சமுகந்தரும் யாவரும் பள்ளிவாசல் முற்றவெளியில் ஒன்று திரண்டு குறித்த செயலில் ஈடுபட்டோருக்கு உரியதை வழங்க வேண்டும் எனவும் நேர்வழி நாடி நிற்போருக்கு அதனை அல்லாஹ் வழங்க வேண்டுமெனவும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறது.



1 கருத்துரைகள் :

Islam said...

மிகவும் நிதானத்துடன் செயற்படவும் அல்லாஹ்வின் உதவி எமது ஒற்றுமையிலும் இஹ்லாஸிலும் தங்கியுள்ளது. சிறந்த மனப்பாண்மையுடன் ஜம்இய்யத்துல் உலமாவின் அனுமதியை சகல ஊர்களிலம் சிறந்த நெறிப்படுத்தலுடன் செயற்பட அன்படன் கேட்டுக்கொள்கின்றேன்

Post a Comment

Flag Counter

Free counters!