இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
உலகில் பின்பற்றப்படும் பிரதான மதங்களுள் இஸ்லாமும் ஒன்று. உலகளாவிய ரீதியில் நான்கு பேரில் ஒருவர் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிமாக இருக்கிறார்.
மொத்த உலக சனத்தொகையில் 150 – 157 கோடிப் பேர் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றனர். இந்தோனேஷியா முதல் மொரோக்கோ வரை முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஐரோப்பா, அமெரிக்கா உட்பட ஏனைய கண்டங்களில் 31 கோடி முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் சுமார் 8% முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.
சர்வ வல்லமை மிக்க இறைவனே முழுப் பிரபஞ்சத்தையும் மனிதனையும் படைத்துப் பரிபாலித்து நிர்வகித்து வருகிறான்.
பூவுலகின் முதல் மனிதர் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களே. அவரது வழித்தோன்றல்களே இன்று 700 கோடியைத் தொட்டிருக்கும் இந்த மனித சமூகம். இந்த மனித சமூகத்தை வழிநடத்துவதற்காக வல்ல இறைவன் காலத்துக்குக் காலம் இறை தூதர்களையும் அவர்களுக்கு நேர்வழி காட்ட இறை வேதங்களையும் அனுப்பி வைத்தான்.
அத்தகைய இறைதூதர்களில் இப்றாஹீம், மூஸா, தாவூத், ஸ¤லைமான், இஸ்மாஈல், மூஸா, ஈஸா (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். தெளராத், இன்ஜில், ஸபூர் ஆகிய வேதங்களை அல்லாஹ் இறைதூதர்கள் மூலம் மக்களுக்கு அருளினான். இதன் தொடரில் இறுதி வேதமாக அல்குர்ஆனை அருளிய அல்லாஹுத் தஆலா, இதனை மக்களுக்கு எத்திவைப்பதற்கு ஒரு தூதரையும் தேர்ந்தெடுத்தான்.
அவர் தான் இறுதி வேதமாகிய அல்குர்ஆனைச் சுமந்த இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது நாற்பதாவது வயதில் அல்குர்ஆனின் முதல் ஐந்து வசனங்கள் அருளப்பட்டன. அது முதல் அவர் மரணிக்கும் வரையிலான 23 வருட காலப் பகுதிக்குள் அல்குர் ஆனிலுள்ள 6666 வசனங்களும் பகுதி பகுதியாக இறக்கியருளப்பட்டன.
அவரது காலப் பகுதியிலேயே அல்குர்ஆன் நபித் தோழர்களின் உள்ளங்களிலும் கையெழுத்து வடிவிலும் பாதுகாக்கப்பட்டன. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முதல் கலீபா அபூக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது ஆட்சிக் காலத்தில் அல்குர்ஆன் முழுமையாகத் தொகுக்கப்பட்டது.
மூன்றாம் கலீபா உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தொகுக்கப்பட்ட அல்குர்ஆனை நூலுருப்படுத்தும் மகத்தான பணியை கச்சிதமாக நிறைவேற்றினார்கள். மட்டுமன்றி, அல்குர்ஆன் பிரதிகளை உலகின் பல பாகங்களுக்கும் அனுப்பி வைத்தார்கள். அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட அல்குர்ஆன் பிரதிகளுள் ஒன்று இன்னும் ரஷ்யாவின் ‘லெனின் கிரேட்’ அரும்பொருட் காட்சிச்சாலையில் பாதுகாப்பாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அல்குர்ஆன் மொழியில் உயர்ந்த இலக்கியமாகவும் அரபு மொழியின் இலக்கண, இலக்கிய சட்டங்களுக்கு அடிப்படையாகவும் திகழ்கிறது. அல்குர்ஆன் இறைவனைப் பற்றியும் அவனது வல்லமை, சக்தி மற்றும் மனிதன், அவன் வாழும் பிரபஞ்சம், அதன் முடிவு, மனிதனின் மரணத்திற்குப் பின்னரான வாழ்வு பற்றிப் பேசுவதுடன் குடும்ப வாழ்வு, பொருளாதாரம், சமூக வாழ்வு, அரசியல், புவியியல், வானவியல், மனிதப் பண்பாடுகள், ஒழுக்கவிழுமியங்கள் பற்றியும் பேசுகிறது. அல்குர்ஆனிய வசனங்கள் சொற்சுருக்கமும் பொருட்டு செறிவுமுடையதாக அமைந்திருப்பது அதன் சிறப்பியல்புகளுள் ஒன்று.
அல்குர்ஆனியப் போதனைகளின் அடிப்படையில் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பின் மத்திய காலத்தில் படிப்படியாக ஒரு பெரும் இஸ்லாமிய நாகரிகம் கட்டியெழுப்பப்பட்டது. அதன் அறிவியல், விஞ்ஞான, மருத்துவ மற்றும் இன்னோரன்ன கலைகளின் வளர்ச்சிக்கு அல்குர்ஆன் அத்திவாரமாகத் திகழ்ந்தது. அதன் உன்னத வழிகாட்டல்கள் மூலம் மனித சமூகம் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகள், சிக்கல்களுக்கு தீர்வு காணும் முயற்சிகள் முஸ்லிம் உலகில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை அதன் நித்திய, சத்திய தன்மைக்குச் சான்று.
1903 இல் தென் இந்தியாவில் பிறந்த ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் ஸ்தாபகரான மெளலானா மெளதூதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சுமார் 30 வருட கால தேடல், ஆய்வின் மூலம் உறுது மொழியில் ஆறு பாகங்களைக் கொண்ட தப்ஹீமுல் குர்ஆனை எழுதினார்கள். இன்று உலகின் பல்வேறு பிரதான மொழிகளில் மொழியாக்கம் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள தப்ஹீமுல் குர்ஆன் விளக்கவுரையை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி சிங்கள மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுகிறது.
தப்ஹீமுல் குர்ஆனின் 6 பாகங்களினதும் சிங்கள மொழி பெயர்ப்பு 4050 பக்கங்களில் 12 பாகங்களாக வெளிவந்துள்ளது. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வெளியிட்டுள்ள இந்த அல்குர்ஆன் விரிவுரை, சிங்கள மொழியில் வெளிவந்துள்ள முதலாவது தப்kர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கள மொழியில் கல்வி கற்ற முஸ்லிம்களும் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களும் அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களும் உலக மாந்தருக்கு வழிகாட்டியாக அருளப்பட்ட அல்குர்ஆனின் போதனைகளை, வழிகாட்டல்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் தப்ஹீமுல் குர்ஆன் விளக்கவுரையை இலங்கை ஜமா அத்தே இஸ்லாமி சிங்கள மொழிக்கு பெயர்த்ததன் நோக்கங்களுள் ஒன்றாகும்.
1989 ஆண்டு ஜமாஅத்தே இஸ்லாமியினால் வெளியிடப்பட்ட தப்ஹீமுல் குர்ஆனின் ஸ¥ரதுல் பாதிஹா, அல்பகரா ஆகிய இரண்டு ஸ¥ராக்களும் சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. நீண்ட கால இடை வெளிக்குப் பிறகு 2000 ஆம் ஆண்டு முதல், ஜமா அத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீர் மெளலவி ஏ. எல். எம். இப்ராஹீம் அவர்களின் ஒரு குழு தப்ஹீமுல் குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்புப் பணியில் ஈடுபட்டது. இந்தக் குழு 11 வருடங்கள் தொடராக மேற்கொண்ட முயற்சியால் இப்பணி கடந்த 18.08.2011/1432 ரமழான் மாதம் 17ஆம் நாள் நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
மெளலானா மெளதூதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களால் உருது மொழியில் எழுதப்பட்ட தஃப்ஹீமுல் குர்ஆன் விளக்கவுரை தமிழ் மொழிக்கு மாற்றம் செய்யப்படுவதற்கு முன்னர் சிங்கள மொழிக்கு மாற்றப்பட்டிருப்பது இலங்கை வாழ் சிங்கள மொழி பேசும் முஸ்லிம்கள் மற்றும் ஏனையவர்களுக்குக் கிடைத்த பாக்கியமாகும்.
அனைவரும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் இலகுவான சிங்கள மொழி நடையில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த தப்kர், சிங்கள மொழி இலக்கியத்திற்கான ஒரு மகத்தான பங்களிப்பாகவும் திகழ்கிறது.
இன்று இலங்கையின் பிரதான நகரங்களில் வாழ்கின்ற முஸ்லிம் மாணவர்களில் சுமார் 40% ஆனோர் சிங்கள மொழியில் கல்வி பயில்கின்றனர். அவர்கள் அல்குர்ஆனை அதன் விளக்கங்களோடு புரிந்து கொள்வதற்கு தஃப்ஹீமுல் குர்ஆன் உதவுகிறது. அல்குர்ஆன் எனும் பொக்கிஷம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல.
அது ஏனையவர்களுக்கும் சென்றடைய வேண்டும். அல்குர்ஆன் சொல்லும் ஆன்மிக, லெளகிக, அரசியல், பொருளாதார மற்றும் வாழ்வின் அனைத்துத் துறைக்குமான வழிகாட்டல்களை அவர்களும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்பனவே தப்ஹீமுல் குர்ஆன் விளக்கவுரை சிங்கள மொழியில் வெளியிடப்படுவதன் நோக்கமாகும்.
ஏற்கனவே தப்ஹீமுல் குர்ஆனின் சிங்கள மொழி பெயர்ப்புப் பிரதிகளை வாசித்த முஸ்லிமல்லாத பலர் இஸ்லாத்தைப் பற்றிய பல உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களைப் பற்றி தங்களுக்கிருந்த பல சந்தேகங்களுக்கு தெளிவைப் பெற்றுக் கொள்வதற்கும் அவை பெரிதும் துணை புரிகின்றன என்று இம்முயற்சியைப் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 16.02.2012 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் தி. மு. ஜயரட்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிங்கள மொழியிலான தப்ஹீமுல் குர்ஆன் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார்.
0 கருத்துரைகள் :
Post a Comment