animated gif how to

முகம்மது நபி (ஸல்) வாழ்க்கை நூல் கைப்பிரதிப் போட்டி- கவிஞர் அல் அஸுமத் முதலிடம்!

January 07, 2012 |

-அஷ்ரஃப் சிஹாப்தீன்-
தமிழ்நாடு, சென்னை, ரஹ்மத் அறக்கட்டளையினால் நடத்தப்பட்ட முகம்மது நபிகள் (ஸல்) வாழ்க்கை வரலாற்று நூலுக்கான கைப்பிரதிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அல் அஸூமத் முதற் பரிசைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

முகம்மது நபிகள் (ஸல்) வாழ்க்கை வரலாறு, முஸ்லிம் அல்லாதாரும் படிக்கும் வகையில் அழகுத் தமிழில் ஆய்வு நடையில் வரலாற்று ஆதாரங்களோடு எழுதப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு ரஹ்மத் அறக்கட்டளை அறிவித்திருந்தது.

உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட இப்போட்டியில் கவிஞர் அல் அஸுமதின் நூல் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நாடறிந்த கவிஞரும் எழுத்தாளருமான கவிஞர் அல் அஸூமத் கடந்த 2002ம் ஆண்டு தமது 'வெள்ளை மரம்' என்ற சிறுகதை நூலுக்கான தேசிய அரச சாஹித்திய விருதையும் 'சிரித்திரன் சுந்தர் நினைவு' விருதையும் பெற்றவர். 

அவரது 'புலராப் பொழுதுகள்' குறுங்காவியநூல் 1984ல் முஸ்லிம் எழுத்தாளர் தேசியக் கவுன்சில் விருதையும் 'அறுவடைக் கனவுகள்' நாவல் கடந்த ஆண்டு தமிழியல் விருதையும் பெற்றன. இவரது 'குரல் வழிக் கவிதைகள்' என்ற நூலுக்கு யாழ். இலக்கிய வட்டம் 2009 இல் மிகச் சிறந்த கவிதை நூலுக்கான விருதை வழங்கியது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் நான்கு வருடங்களுக்கும் மேலாக இவர் நடத்தி வந்த 'கவிதைச் சரம்' நிகழ்ச்சி பல கவிஞர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது. தொலைக் காட்சி, வானொலி, மேடைக் கவியரங்குகள் பலவற்றில் தலைமை வகித்த அனுபவமிக்க கவிஞரான கலாபூஷணம் அல் அஸூமத் முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வரால் 'கவித் தாரகை' விருது வழங்கியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணியினரால் 2008ம் ஆண்டு 'இலக்கிய சாகரம்' பட்டம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டவர்.

கடந்த ஆண்டு காயல்பட்டினத்தில் தமிழ்நாடு இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய 13ஆவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் 'தமிழ் மாமணி' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட மூன்று இலங்கையருள் கவிஞர் அல் அஸூமத்தும் ஒருவர் ஆவார்.  

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!