இலங்கையில் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் குறித்த போதனைகளை நடத்துவதற்கு இலங்கை வரும் தப்லீக் ஜமாஅத் இயக்கத்தவர்கள், கிராண்ட்பாஸிலுள்ள அதன் தலைமையகமான மர்கஸின் சிபாரிசுடன் வந்தால் விஸா வழங்குவது என இணக்கம் காணப்பட்டதாக முஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம்.நவவி தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தலைமையில் இன்று திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தப்லீக் ஜமாஅத் அமைப்பு நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்றமையினால் குறித்த அமைப்பின் சிபாரிசுடன் வருபவர்களுக்கு விஸா வழங்கப்படும் என பணிப்பாளர் நவவி கூறினார்.
போதனைகளை நடத்துவதற்கு இலங்கை வரும் தப்லீக் ஜமாஅத் இயக்கத்தவர்கள் தங்கியிருக்கும் பிரதேசங்கள் மற்றும் கால எல்லை தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சில பத்திரிகைகளில் வெளிவந்துள்ளதை போன்று குறித்த அமைப்பினர் எந்தவித தீய செயல்களிலும் ஈடுபடவில்லை என கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்ததாக பணிப்பாளர் நவவி மேலும் குறிப்பிட்டார்.
இந்த விசேட கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தி, முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன், புத்தசாசன விவகார அமைச்சின் பிரதிநிதிகள், முஸ்லிம் சமய விவகார திணைக்கள் பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம்.நவவி மற்றும் தப்லீக் ஜமாஅத் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொணடனர்
0 கருத்துரைகள் :
Post a Comment