தாலிபான் போராளிகளின் இறந்த உடல்கள் மீது அமெரிக்க ராணுவத்தினர் சிறுநீர் கழித்தது தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என பெண்டகன் அறிவித்துள்ளது.
இதனை யார் செய்தாலும் அது ராணுவத்திற்கு உகந்த செயல் அல்ல என பெண்டகனின் செய்தித் தொடர்பாளர் கேப்டர்ன் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
யார் இந்த வீடியோவை வெளியிட்டார்? இதன் உண்மை நிலை என்ன? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என கிர்பி கூறினார்.
இச்சம்பவத்தை ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய் கண்டித்துள்ளார். மனிதத் தன்மையற்ற இச்செயலை குறித்து விசாரணை நடத்தவேண்டும் என அமெரிக்க அதிகாரிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நான்கு அமெரிக்க ராணுவத்தினர் இறந்து கிடக்கும் தாலிபான் போராளிகளின் உடல்கள் மீது சிறுநீர்கழிக்கும் காட்சிகள் இணையதளத்தில் உலா வருகின்றன.
‘மகத்தான தினம்’ என ராணுவத்தில் யாரோ ஒருவர் பேசுவது இக்காட்சிக்கு இடையே கேட்கிறது. இக்காட்சிகள் ராணுவத்தினருக்கு தெரிந்தே எடுக்கப்பட்டுள்ளது. தாலிபானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் வேளையில் இக்காட்சிகள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குவாண்டனாமோ சிறையில் இருந்து தாலிபான் கைதிகளை விடுதலைச் செய்யவும் அமெரிக்கா தீர்மானித்திருந்தது.
ஆனால், அமெரிக்காவிற்கும் தாலிபானுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையை இச்சம்பவம் பாதிக்காது என தாலிபான் செய்தி தொடர்பாளர் ஸபீயுல்லாஹ் முஜாஹித் கூறியுள்ளார். அதேவேளையில் ஆப்கானில் இச்சம்பவம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment