November 22, 2011.... AL-IHZAN Local News
தீராநதி : இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கையின் மூன்றாவது முக்கிய சமூகத்தவர்களான முஸ்லிம்கள் உள்ளடக்கப்படவில்லை என்கிற குறை அவர்களிடம் இருப்பதாக அறிகிறோம். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? த.தே.கூ. முஸ்லிம்களையும் சேர்த்து பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று கூறமுடியுமா? ...
(இலங்கையின் தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது தீராநதி பத்திரிகை அவரிடம் செவ்வி கண்டிருந்தது. அதன்போது முஸ்லிம்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்வியையும், அதற்கான பதிலையும் இங்கு தருகிறோம்)
தனபாலசிங்கம்: முஸ்லிம்களுடைய பிரச்சினையை த.தே.கூ. பிரதிநிதித்துவப்படுத்துவதென்பதில் ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. தமிழ்பேசும் மக்களென்று நாங்கள் முஸ்லிம்களையும் சேர்த்துப் பொதுவில் பயன்படுத்துகிறோம். இங்கே தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் தம்மைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வது போல அங்கே சொல்லிக் கொள்கிற கலாச்சாரமில்லை. அதற்கு ஆயுதப் போராட்டங்களும் அதற்கு முந்தைய தமிழ்த் தலைமைகள் நடந்து கொண்ட முறையும் ஒரு காரணம்.
இதில் எந்தப் பக்கம் பிழை என்பதைக் கதைக்க இது நேரமில்லை. ஆனால் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினைகள் என பொதுவாக அடையாளப்படுத்தக் கூடிய பிரச்சினைகளும் இருக்கின்றன. இரண்டு சமுதாயத்திலும் தனித்துவமான பிரச்சினைகளும் இருக்கின்றன.
முதலில் இரண்டு பேருக்கும் பொதுவான பிரச்சினைகளிலாவது ஒத்துழைக்கிற ஒரு தந்திரோபாயத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மற்ற பிரச்சினை இரண்டாம் பட்சமாகிவிடும். ரெண்டு பேருமே பேரினவாத ஒடுக்குமுறையால் வருகிற பொதுவான பிரச்சினைகளான நில அபகரிப்பு, மொழி பயன்பாட்டில் உள்ள ஆதிக்கம் எல்லாவற்றையும் எதிர்ப்பதிலே எங்களால் ஒன்றுபட்டு செயல்பட முடியும். தனித்துவமானவை பற்றி இப்போது நாங்கள் சண்டை பிடிக்கப் போக மாட்டோம் என்கிற கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் போன்றவர்கள் ரொம்பவும் சிநேகபூர்வமான சக்திகள். தீவிர முஸ்லிம் தேசியவாதம் பேசுகிறவர்கள் அல்ல. சம்பந்தன் ஒப்பீட்டளவில் வயது முதிர்ந்தவர். நிதானமான சிந்தனை உள்ளவர். பொதுவாக நாங்கள் பாதிக்கப்படுகிற பிரச்சினையில் சேர்ந்து செயல்படுவதற்கான ஒரு அணுகல் முறையை மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியுமாயிருந்தால் நல்லது.
0 கருத்துரைகள் :
Post a Comment