animated gif how to

அஷ்ரப் நகர் காணிப்பிரச்சினை - உறுதிப்பத்திரம் உள்ளோர் அஞ்சவேண்டாம்

November 17, 2011 |

November 17, 2011.... AL-IHZAN Local News

அம்பாறை மாவட்டத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அஷ்ரப் நகரின் காணிப் பிரச்சினையை பொறுத்தவரை அங்கு சட்ட பூர்வமாக வசிப்பவர்களும், சட்ட ரீதியான உறுதிப் பத்திரங்களையும், உரிய ஆவணங்களையும் தம் வசம் வைத்திருப்போரும் அங்கிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அம்மாவட்டத்திற்கு பொறுப்பான வனப் பாதுகாப்பு அதிகாரி லலித் கமகே. நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் ஹக்கீமுக்கும், அம்பாறை மாவட்ட வன பாதுகாப்பு அதிகாரி லலித் கமகேயிற்கும் இடையிலான இந்தச் சந்திப்பு கொழும்பில் அமைச்சரின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றது...

இந்தச் சந்திப்பை தொடர்ந்து அடுத்த கட்டமாக வன பாதுகாப்பு உயர் அதிகாரி லலித் கமகே உடன் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவர் ஏ.எல்.எம். நkர் மற்றும் ஒலுவில் பள்ளிவாசல் நிருவாக சபையினர் சந்தித்து கலந்துரையாடவும், பின்னர் வன வள பாதுகாப்பு அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, தாம் உயர் அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவசியமேற்படின் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.


சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக வசிப்போர் சட்ட பூர்வமான உறுதிப்பத்திரங்களையும் ஆவணங்களையும் வைத்திருப்பதாகவும், அவர்களை அங்கிருந்து வெளியேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சி குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும், அதன் விளைவாக பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும், அவ்வாறான நடவடிக்கை கைவிடப்பட வேண்டுமென்றும் அமைச்சர் ஹக்கீம் வனப் பாதுகாப்பு அதிகாரியிடம் கூறினார்.


குறிப்பிட்ட பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைக்கப்படுவது பற்றி அமைச்சர் ஹக்கீம் கூறியபோது, அது தற்காலிகமான தென்று தெரிய வருவதாக வனப் பாதுகாப்பு அதிகாரி பதிலளித்தார். படையினர் அங்கு நிலைகொண்டுள்ளது பற்றி அமைச்சர் தெரிவித்த போது அண்மையில் அப் பகுதி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து இராணுவத்தினரது எண்ணிக்கை அப் பிரதேசத்தில் சற்று அதிகரிக்கப்பட்டிருப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.


சர்ச்சைக்குரியதென கூறப்படும் பிரதேசம் எழுபத்தாறு ஏக்கர் விஸ்தீரணத்தை கொண்டது என்றும், அந்த காணிகளுக்கு சொந்தமான பதினாழு குடும்பத்தினரில் ஏழு குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வழக்கில் அவர்களுக்கு சாதகமான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய ஏழு குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரணையில் இருப்பதாகவும் நீதியமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். இவ்வாறான சூழ்நிலையில் அத்தகையோரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப் படுமானால், அது முற்றிலும் அநீதியானதென்றும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!