animated gif how to

அப்துல் கலாமிற்கு அவமதிப்பு: அமெரிக்கா மன்னிப்பு கோரியது

November 14, 2011 |

November 14, 2011.... AL-IHZAN India News

முன்னாள் குடியரசுத்தலைவரும், பிரபல விஞ்ஞானியுமான ஏ.பி.ஜெ.அப்துல் கலாமை அமெரிக்க விமானநிலையத்தில் வைத்து மீண்டும் உடல் பரிசோதனை என்ற பெயரால் அவமதித்தது குறித்து இந்தியா எழுப்பிய கடும் எதிர்ப்பை தொடர்ந்து அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளது.


நியூயார்க்கில் ஜான் எஃப் கென்னடி விமானநிலையத்தில் வைத்து கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி கிட்டத்தட்ட 2 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.


விமானத்தில் ஏறும் முன்பு உடல் பரிசோதனை நடத்தப்பட்ட அப்துல் கலாமிடம் சந்தேகம் தீராமல் மீண்டும் விமானத்திற்கு உள்ளே ஏறி இருக்கையில் அமர்ந்திருந்த பிறகும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்துல் கலாமுடன் பயணித்த இந்திய அதிகாரிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது...

விமான பணியாளர்களிடம் வாசலை நிர்பந்தித்து திறந்த பிறகு பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டாவது தடவையாக சோதனையை நடத்தியுள்ளனர். அப்பொழுதும் அப்துல் கலாமுடன் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு அதனை பாதுகாப்பு அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர். அப்துல் கலாமின் ஷூவையும், கோட்டையும் கழற்றி வாங்கி பரிசோதித்துள்ளனர்.


இந்தியாவின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து அமெரிக்கா மன்னிப்பு கோர தயாரானது. இச்சம்பவம் குறித்து வருந்துவதாகவும் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து உருவாகமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் டெல்லியில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அப்துல் கலாமுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் வருந்துவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.


வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உத்தரவின் பேரில் அமெரிக்காவின் இந்திய தூதர் நிருபமா ராவ் இவ்விவகாரம் குறித்து அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மெண்டின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் கடுமையான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொள்ள வேண்டிவரும் என இந்தியா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.


“பாதுகாப்பு சோதனை என்ற பெயரில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவமதிக்கப்பட்டதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. விமான நிலையங்களில், சோதனையிடுவதில் விலக்கு அளிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில், அவரின் பெயரும் உள்ளது. அதையும் மீறி, அவருக்கு இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடருமானால், இந்தியாவுக்கு வரும், அமெரிக்க வி.ஐ.பி.,களிடம், நாங்களும் இதுபோல் நடந்து கொள்ள வேண்டியிருக்கும்” என இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த அமெரிக்காவின் போக்குவரத்துத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையின் கடிதத்தை அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவிற்கும், அப்துல் கலாமிற்கு அளித்துள்ளனர்.


அமெரிக்காவிடமிருந்து அப்துல் கலாமுக்கு இரண்டாவது தடவையாக அவமதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2009 ஏப்ரல் மாதம் டெல்லி விமானநிலையத்தில் வைத்து காண்டினண்டல் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அப்துல் கலாமிற்கு உடல் பரிசோதனை நடத்தியது கடும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அன்று விமானப் போக்குவரத்துறை ஏர்லைன்ஸ் அதிகாரிகள் மீது சட்டரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து ஆலோசித்த போதிலும் அமெரிக்க தூதரகம் அப்பொழுதும் வருத்தம் கேட்டதை தொடர்ந்து நடவடிக்கையை கைவிட்டது இந்திய அரசு. ஆனால், மீண்டும் அதேமாதிரியான சம்பவம் அப்துல் கலாமுக்கு நேர்ந்துள்ளது. உடனிருந்தவர்கள் எதிர்த்தபொழுதும் அப்துல் கலாம் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். இத்தகைய சம்பவங்களை தான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என அவர் கூறியதாக அவருடன் தொடர்புடையவர்கள் கூறுகின்றனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என அமெரிக்கா தெரிவித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


இந்தியா-அமெரிக்கா அதிகாரிகள் ஒன்றிணைந்து பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டியவர்களின் புதிய பட்டியலை தயார் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!