animated gif how to

கிறீஸ் மனிதனை காரணம்காட்டி கிழக்கு முஸ்லிம் பகுதிகளில் இராணுவம் குவிப்பு

August 18, 2011 |

August 18, 2011.... AL-IHZAN Local News

கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் மர்மமனிதர் விவகாரத்தினால் எழுந்துள்ள பதற்ற நிலையைக் காரணம் காட்டி அரசு அங்கு தனது படைகளைக் குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் பொதுமக்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்ற கிண்ணியா பிரதேசத்துக்கு மேலதிகமாக இரண்டு பற்றாலியன்  இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 


இந்த இரண்டு பற்றாலியன்களையும் சேர்ந்த சுமார் 1500 படையினர் கிண்ணியா பிரதேசத்தில் புதிய படை முகாம்களை நிறுவி நிலை கொண்டுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கிழக்குப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, புதிதாக அமைக்கப்பட்டுள்ள படைமுகாம்கள் கிண்ணியாவின் முழுப்பகுதியினதும் பாதுகாப்பைக் கவனித்துக் கொள்ளவுள்ளதாகக் கூறியுள்ளார்.  அதேவேளை கிண்ணியா கடற்படை முகாமை அகற்ற முடியாது என்று  பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இந்த முகாமின் பாதுகாப்புக்காக மேலதிக கடற்படையினரை அனுப்பி வைத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்...
இதுபோன்றே அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும்  படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ், முஸ்லிம் பிரதேசங்களிலேயே இவ்வாறு படைக்குவிப்பு இடம்பெற்று வருகிறது. அத்துடன் படையினர் போர்க்காலத்தில் சட்டத்தை தம் கையில் எடுத்துக் கொண்டு செயற்பட்டது போன்று பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


கிழக்கில் பல்வேறு இடங்களிலும் மர்ம மனிதர்களைத் துரத்திச் சென்றவர்கள் படையினரின தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். வீடுகளுக்குள் புகுந்தும் வீதிகளிலும் பொதுமக்கள் படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள் கிழக்கில் அதிகரித்துள்ளன. இதன்காரணமாக பொதுமக்கள் மத்தியில் பீதியும் பதற்றமும் அதிகரித்து வருகிறது. 


அதேவேளை கலகத்தை அடக்குகின்ற போர்வையில் படையினர் மீளவும் டாங்கிகள், கவசவாகனங்கள் போன்றவற்றை பொதுமக்கள் மீதான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். கிழக்குப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தாம் கவசவாகனங்களையும், டாங்கிகளையும் பூட்டி வைத்திருப்பதாக மட்டக்களப்பில் கூறியிருந்தார். ஆனால், பொத்துவில் வன்முறையை அடுத்து இரண்டு டாங்கிகளுடன் அங்கு சென்றதாக அவரே குறிப்பிட்டிருந்தார். 


மர்மமனிதர்கள் விவகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு படைத்தரப்பு கிழக்கில் படைக்குவிப்பை மேற்கொண்டு வருவதுடன், அங்கு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் போர்க்கால நடவடிக்கைளிலும் ஈடுபட்டு வருகிறது. படையினரின் படைக்குவிப்புக்கு மத்தியில் மர்மமனிதர்கள் பற்றிய பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!