animated gif how to

அறிஞர் சித்திலெப்பை

June 11, 2011 |


முகம்மது காசிம் சித்திலெப்பை மரைக்காயர் (ஜூன் 11, 1838 - பெப்ரவரி 5, 1898) நவீன உரைநடை இலக்கியத்தில் முன்னோடிப் படைப்பாளிகளில் முக்கியமானவர். அவரது இயற்பெயர் முகம்மது காசிம்.

இலங்கை முஸ்லிம்களைக் குறிப்பாகக் கல்வித்துறையில் விழிப்புணர்ச்சியடையச் செய்ய அரும்பாடுபட்ட ஈழத்து எழுத்தாளர். மறுமலர்ச்சித் தந்தை என அழைக்கப்படுபவர். பாடசாலைகளை நிறுவியும், பாடநூல்களை எழுதியும் செயலாற்றினார். 

ஈழத்தின் முதலாவது தமிழ் நாவலான அசன்பே சரித்திரம் என்ற நாவலை எழுதியவர். இவர் ஈழ இஸ்லாமியர்களின் உரிமைக்காக வாதாடும் முஸ்லிம் நேசன் என்ற இதழை நடத்தியவர். இவர் சட்ட வல்லுனரும், பத்திரிகையாளரும், கல்வியாளரும், சமூக சேவையாளரும் ஆவார்.



அறிஞர் சித்திலெப்பை கண்டியில் பிறந்தவர். பிரபலமிக்க அரேபிய வணிக சமூகமொன்றின் வழிவந்தவர். அரேபிய மண்ணிலிருந்து வணிக நோக்கில் இலங்கைக்குப் பொருள் தேடிவந்த முல்க் ரஹ்மதுல்லா பார்பரீன் என்பவர் முஸ்லிம்களின் இறங்கு துறையின் முக்கிய தளங்களிலொன்றான அளுத்காமம் எனும் பகுதியில் குடியேறி அங்கேயே திருமணம் புரிந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். அவரது பரம்பரையைச் சேர்ந்தவரே சித்திலெப்பை. 

முல்க் ரஹ்மதுல்லாவின் புதல்வரான முகம்மது லெப்பையும் தந்தை வழியில் வர்த்தகம் புரிந்து வாழ்க்கை நடத்தியவராவார். ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் கண்டி இராச்சியத்தை ஆண்டு வந்த காலகட்டத்தில் வியாபார நடவடிக்கைகளுக்காக கண்டிக்கு வந்த இவர் இங்கேயே திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அவருக்குப் பிறந்த ஆண் மகவு தான் முகம்மது லெப்பை சித்தி லெப்பை ஆவார். 

1833ம் ஆண்டில் இந்நாட்டின் முதல் முஸ்லிம் வழக் கறிஞராக நியமனம் பெற்ற இன்னா ருக்கு மூன்றாவது குழந்தையாக 1838 ஜூன் 11ல் கண்டியில் பிறந்தவர் முகம்மது காசிம் சித்திலெப்பை. 

திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயின்ற காலகட்டத்தில் குர்ஆன் ஓதல், மார்க்க சட்ட திட்டங்கள் பற்றிய அறிவு பெற்றதோடு தமிழ் மொழியிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். ஆங்கில மொழியையும் கற்றுத் தேறினார். அரபு, தமிழ், ஆங்கிலம் எனும் மும் மொழிகளிலும் அதிதிறமையாக விளங்கிய இவர் தந்தையைப் போன்றே சட்டக் கல்வியிலும் சிறந்த விளங்கினார். 

கண்டி மாவட்ட நீதி மன்றத்திலே 1862ல் வழக்கறிஞராக நியமனம் பெற்ற சித்திலெப்பை 1864ம் ஆண்டில் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உயர் நியமனம் பெற்றார். சமகாலத்தில் பிரசித்த நொத்தாரிசாகவும் பணிபுரிந்த இவரால் எழுதப்பட்ட காணி உறுதிகள் பல இன்றும் பலரிடம் உள்ளதாக அறிய முடிகிறது. கண்டி மாநகர சபை நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் கடமை யாற்றிய இவர், சிறிது காலம் மாநகர சபை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார்.

இலங்கை சட்ட நிர்ணய சபையில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இருத்தல் அவசியமென்று இடையறாது வன்மையாகப் போராடினார். இதன் பயனாக 1889 ஆம் ஆண்டில் இசுலாமியர் இருவர் நியமன உறுப்பினராக அங்கத்துவம் பெற்றனர். இலங்கை முஸ்லிம்களின் நன்மைக்கான எந்தச் சட்டத்தையும் முழு மூச்சுடன் ஆதரித்து வந்தார். முஸ்லிம் விவாகப் பதிவுச் சட்டத்தை பழமை விரும்பிகள் எதிர்த்த போது சித்தி லெப்பை வரவேற்றார். அத்துடன் இது விசயத்தில் தமது முழு ஆதரவையும் அரசாங்கத்திற்கு நல்கினார்.

1 கருத்துரைகள் :

M.J.M KAISAN said...

அன்னார் தனது உம்மத்துக்கு இடை விடாது பாடுபட்டார் அவர் மறைந்தாலும் அவரது பணிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தைக் கொடுப்பானாக! முஹம்மது கைஸான்

Post a Comment

Flag Counter

Free counters!