June 05, 2011.... AL-IHZAN World News
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரைத் தன்னுடைய நிரந்தரத் தலைநகராக மாற்றியமைக்கும் முயற்சிகளில் மிக வேகமாக ஈடுபட்டு வருகின்றது என இஸ்லாமிய – கிறிஸ்தவ கமிஷன் (ICC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ அமெரிக்கக் காங்கிரஸில் உரை நிகழ்த்தியபோது, 'இஸ்ரேல் தன்னுடைய தற்போதைய ஆள்புலத்தை 1967 ஆம் ஆண்டு எல்லைகளை நோக்கி ஒருபோதும் சுருக்கிக்கொள்ளப் போவதில்லை என்றும், இஸ்ரேலின் நிரந்தரத் தலைநகராக ஒருங்கிணைக்கப்பட்ட ஜெரூசலமே அமைதல் வேண்டும் எனத் தான் விரும்புவதாக'வும் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.........
இந்நிலையில், "இஸ்ரேல் தன்னுடைய வரலாறு, பண்பாடு, கலாசாரம், மதம் முதலான அனைத்தையுமே திரிபுபடுத்தியுள்ளது" என கடந்த புதன்கிழமை (01.-6.2011) என்று இஸ்லாமிய – கிறிஸ்தவ கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இன்று உலகில், குறிப்பாக அரபுலகில் யூதமயமாக்கம் மிக வேகமாகவும் முழு முனைப்போடும் இடம்பெற்று வருகின்றது. சர்வதேச சட்டங்கள், ஐ.நா.வின் தீர்மானங்கள் என இவை அனைத்துக்கும் முரணான பல செயற்திட்டங்கள் இஸ்ரேலால் சர்வ சாதாரணமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புனித ஜெரூசல நகரின் நிலங்களையும் கட்டடங்களையும் பலவந்தமாகக் கைப்பற்றிக் கொள்ளுதல், வாழையடி வாழையாக அங்கே வாழ்ந்துவரும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களை அங்கிருந்து வெளியேற்றுதல், பாரம்பரிய இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மரபுரிமைச் சின்னங்களை அழித்து அவற்றை யூதமயப்படுத்தல், காலங்காலமாக இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவப் பெயர்களைக் கொண்டிருந்த இடங்களின் பெயர்களை நீக்கி யூதப் பெயர்களைச் சூட்டுதல் எனப் பல்வேறு நடவடிக்கைகளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை மேற்கொண்டு வருகின்றது" என மேற்படி அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
"இஸ்ரேல் தன்னுடைய இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கைகளைத் துணிவாக முன்னெடுப்பதற்குப் பக்கபலமாக இருப்பது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவும், அரபு மன்னர்களின் அடிமை மனப்பான்மையுமே" என இஸ்லாமிய – கிறிஸ்தவ கமிஷன் வன்மையாகச் சாடியுள்ளது.
"தற்போது அரபுலகெங்கிலும் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்கள், மத்திய கிழக்கு நிலைமைகளை சீராக்கக்கூடிய திருப்புமுனையாக அமைவதோடு, பலஸ்தீன் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வினைப் பெற்றுத் தந்து, இஸ்ரேலிய அராஜகங்களையும் அதன் இனத் துவேஷப் போக்கினையும் முறியடிக்கும்" என அந்த அறிக்கையில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment