animated gif how to

“வானம்” படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து த.மு.மு.க கமிஷனரிடம் புகார்

May 09, 2011 |

May 09, 2011.... AL-IHZAN India News
நடிகர் சிம்பு நடித்து வெளிவந்துள்ள வானம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமுமுக.,வினர் நெல்லை கமிஷனர் வரதராஜீடம் நேற்று மனு அளித்தனர்.இது குறித்து தமுமுக., மாவட்ட தலைவர் மைதீன்பாரூக், மாவட்ட செயலாளர் காசிம், மமக., மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன், மாவட்ட துணை செயலாளர் செய்யது தலைமையில் கட்சியினர் நெல்லை கமிஷனரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள “வானம்’ திரைப்படத்தில் மன்சூர்கான் என்ற பெயரில் நடிக்கும் நடிகர் தீவிரவாதியாகவும், திருக்குர்ஆன் படிப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என உணர்த்தும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி முஸ்லிம் மதத்தினர் அனைவரும் தீவிரவாதி என்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது மனவேதனையை............

அளிக்கிறது.அதுபோல் நசீர் என்ற நடிகர் அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார்.

 இந்த வார்த்தைக்கு தமிழில் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் என்ற பொருளாகும். தீவிரவாத செயல்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த வார்த்தை திரைப்படத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ்,நசீர் என்ற நடிகரை தேடி சென்று சிலரிடம் கேட்கும் காட்சியில்,நசீர் திருவல்லிக்கேணி மசூதியில் போய் தேடும்படி கூறுகின்றனர்.இந்த காட்சி தீவிரவாதிகளுக்கு மசூதியில் அடைக்கலம் கொடுப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

இந்த காட்சி பள்ளிவாசல்களை இழிவுபடுத்தும் செயலாகும்.மேலும் கதாநாயகன் சிம்பு படத்தின் இறுதி காட்சியில் தீவிரவாதிகளாக தோன்றும் நபர்களிடம் மனிதர்களை பாருங்கள், கடவுளை பார்க்காதீர்கள் என கூறுகிறார். இந்த காட்சி அல்லாஹ்வை விட மனிதன் உயர்ந்தவன் என காட்டப்பட்டுள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

அமைதிப்பூங்காவாக உள்ள தமிழகத்தில் எங்களது மார்க்கத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக வானம் திரைப்படம் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர், நடிகர்கள் உட்கருத்துடன் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

எனவே முஸ்லிம்களின் மத உணர்வுகளையும்,நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தும் வானம் திரைப்படத்தை தொடர்ந்து திரையிடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!