March 07, 2011.... AL-IHZAN Local News
இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிகட் விளையாட்டு அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த 26 ஆம் திகதி கெத்தாராம விளையாட்டரங்கில் நடைபெற்றது இதன் போது முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தனர் பாகிஸ்தான் கொடிகளை தமது வீடுகளில் ஏற்றியுள்ளனர் இலங்கையின் தேசிய கொடியை முஸ்லிம்கள் மதிப்பதில்லை இலங்கை தேசிய கொடியை மதிக்காதவர்கள் இலங்கையில் இருந்து வெளியேறவேண்டும் அவர்கள் இலங்கையில் இருக்க தகுதியற்றவர்கள் என்று சில அரசியல் வாதிகள் தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபால தெரிவித்திருந்தார் இவை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுபினர் ஏ.எச்.எம்.அஸ்வர் சகல இன மக்களும் இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமென ஆரவாரம் செய்ததை அனைவரும் அன்று கண்டனர் விரிவாக
எனினும் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு சிலர் சிலரது வீடுகளில் பாகிஸ்தான் அணியின் கொடியைப் பறக்கவிட்டதாக அபாண்டமாகப் பழியைச் சுமத்தினர். போட்டியின்போது பிரதான பார்வையாளர் கூடத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்களுடன் நானும் அமர்ந்திருந்தேன். முஸ்லிம்களும் ஏனைய மக்களோடு இணைந்து இலங்கை சார்பாகத்தான் ஆதரவு தெரிவித்தார்கள்.
தேசியக் கொடியைத் தமது வீடுகளில் பறக்கவிடாத எவரும் எமது நாட்டில் இருப்பதற்குத் தகுதியற்றவர்கள் என்று வரலாறு தெரியாதவர்கள் கொக்கரிக்கின்றனர். இந்நாட்டு முஸ்லிம்கள் பற்றி புதிதாகப் பாடம் சொல்லித்தர வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. தேசப்பற்றுடன் தேசியக் கொடிக்கு மரியாதை செய்யம் இந்நாட்டு முஸ்லிம்களின் தலையாய கடமை என்பதை எப்போதும் உணர்ந்துள்ளனர். எமது முன்னோர்கள் எமக்கு எப்போதும் இதையே வலியுறுத்தி வந்தனர்.
தேசியக்கொடியைப் பிரகடனப்படுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட குழுவில் முஸ்லிம்களின் சார்பில் டாக்டர் டி.பி.ஜாயா இருந்தார் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மாளிகாவத்தை,கெத்தாராம பகுதிகளில் உள்ளவர்களை எனக்கு நன்கு தெரியும். இவ்வாறு அபாண்டமாக முஸ்லிம்களின் மீது பழியைச் சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததும் கண்டிக்கத்தக்கதுமாகும். எந்தவொருவரும் இவர்கள் கூறுவதைப்போன்று பாகிஸ்தான் அணியின் கொடியைப் பறக்கவிடவில்லை என்பது யாவரும் தெரிந்த உண்மையாகும்.
இது தொடர்பாக அரசாங்கத்தின் மேலிடத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன். நாட்டை ஒற்றுமைப்படுத்தி அனைத்து மக்களிடையேயும் நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எடுத்துவரும் முயற்சிகளுக்கு களங்கம் விளைவிக்கவே இவ்வாறான போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இவ்விடயத்தில் யாராக இருந்தாலும் நாட்டுப்பற்றுடன் செயல்படுமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தத்துடன்
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை இது தொடர்பாக பள்ளிவாசல்கள் ஊடாகவும் ஊடகங்கள் மூலமாகவும் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் ரூபவாஹினி கூட்டுத்தாபன “ஐ’ அலைவரிசையில் நடைபெற்ற கிரிக்கெட் விமர்சனத்தின்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment