February 07, 2011.... AL-IHZAN Local News
மழை வீழ்ச்சி குறைவடையத் தொடங்கிய போதிலும் இலங்கைக்கு அருகில் மீண்டும் தாழ் அமுக்க நிலை உருவாகி இருப்பதால் மழைக் காலநிலை மேலும் தொடரும் என்று நேற்று அறிவிக்கப்ட்டுள்ளது தற்போது நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதாக தெரிய வருகின்றது.
தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு காரணமாக 3 லட்சத்து 65 ஆயிரத்து 536 குடும்பங்களைச் சேர்ந்த 12 லட்சத்து 57 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 88 ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 25 ஆயிரத்து 448 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி 676 முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதிப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ,பொலன்னறுவை, அனுராதபுரம், மன்னார் , வவுனியா, முல்லைத்தீவு, பதுளை ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று அறிய முடிவதுடன் கண்டி , மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தற்போதும் கடும் மழை பெய்து வருவதாக தெரியவருகின்றது.
இதேவேளை பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட குறுகிய காலத்திற்குள் மீண்டும் சீரற்ற காலநிலை ஆரம்பித்துள்ளதால், நீர்த்தேக்கங்கள், குளங்கள், ஆறுகளை அண்மித்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எச்சரிக்கை செய்துள்ளார்.
ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த வான் கதவுகள், அணைகள் போன்றவை இன்னமும் புனரமைக்கப்படாத நிலையில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், பாரிய ஓர் அனர்த்தம் ஏற்படலாமென அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.
0 கருத்துரைகள் :
Post a Comment