animated gif how to

பொத்துவில் முஸ்லிம் தனியார், மற்றும் அரச காணிகளுக்கு அச்சுறுத்தல்

December 15, 2010 |

December 15, 2010.... AL-IHZAN Local News

பொத்துவில் 3 ஆம் பிரிவு சாய்வுத்தம்பி தோட்டப் பகுதியிலுள்ள புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்திற்குச் சொந்தமான வரலாற்றுச் சின்னங்கள் உள்ள இடத்திற்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிக்கும் பௌத்த தேரர் ஒருவரினாலும் படையினராலும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பொத்துவில் பிரதேசசபை உதவித் தவிசாளர் ஏ.எம்.எம்.தாஜுதீன் தெரிவித்துள்ளார் என்று பொத்துவில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு எல்லை வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்க உரிய தரப்பினர் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். என்றும் இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிம் வெளியாகியுள்ளது விரிவாக பார்க்க
1962 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் ஒருவரினால் கண்டெடுக்கப்பட்ட புராதனப் பொருள் ஒன்றின் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதேசம் இன்றுவரை எல்லைவேலி இடப்படாமலும் முறையாகப் பராமரிக்கப்படாமலும் இருப்பது தொடர்பாக இப்பகுதி முஸ்லிம்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த இடத்திற்கு அருகாமையில் குடியேறியுள்ள தேரர் ஒருவர் அப்பகுதி முழுவதும் “மூதுமஹா விகாரை’ என்றும் அப்பிரதேசம் மூதுமஹா விகாரைக்குச் சொந்தமானது என்றும் கூறி வருகிறார். பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளில் கட்டிடங்களை அமைக்க முற்படுவதுடன் காணி அபிவிருத்திகளில் ஈடுபடும் பொழுது காணிச் சொந்தக்காரர்களை தடை செய்வதும் அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதும் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த சவாலாகவுள்ளது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை கட்டிடமொன்று அமைப்பதற்கான முஸ்தீபுகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்களின் புகாரையடுத்து பொத்துவில் பிரதேசபை தவிசாளர் உப உறுப்பினர்களும் அவ்விடத்திற்குச் சென்றபோது அங்கு பொத்துவில் அறுகம்பை விசேட அதிரடிப்படையினர் சிலர் ஆயுதத்துடனும் சிலர் ஆயுதமில்லாமலும் கட்டிடமொன்றை அமைப்பதற்கான முன்னோடி வேலைகளைச் செய்து கொண்டிருந்ததை காண முடிந்தது.
இது தொடர்பாக பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வசந்தகுமாரவிடம் முறையீடு செய்யப்பட்டதையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வசந்தகுமார மற்றும் பொத்துவில் பிரதேச சபையின் ஜனாப், தவிசாளர் எம்.எஸ்.எம்.மர்சூக்,
உபதவிசாளர் ஏ.எம்.எம்.தாஜுதீன் ,எம்.எஸ்.எம்.வாசித் ஆகியோர் அவ்விடத்திற்குச் சென்றபோது அத்துமீறிய கட்டிட அமைப்புக்கான முன்னோடி வேலைகளில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினரையும் ஏராளமான பொதுமக்களையும காணக்கூடியதாக இருந்தது. உடனடியாக கட்டிட முன்னோடி வேலையை பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வசந்தகுமார தடுத்து நிறுத்தினார். இதன் மூலம் அவ்விடத்தில் ஏற்படவிருந்த முறுகல் நிலையும் தவிர்க்கப்பட்டது.
இதேபோன்று கடந்த செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைத் திட்டத்தின் கீழ் தனது வளவைத் துப்புரவாக்கிக் கொண்டிருந்த ஏ.எல்.ஏ.பாரி என்பவர் பௌத்த மதகுருவினால் தடுக்கப்பட்டிருந்ததோடு அதற்கு எதிர்மாறான அறிக்கையையும் பத்திரிகைகளில் வெளியிட்டார். இவ்வாறு அடிக்கடி ஏற்படும் பிணக்குகளினால் அப்பகுதி முஸ்லிம்களால் முன்பிருந்த பௌத்த மதகுருவிற்கு எதிராக வழக்குகளும் பொத்துவில் நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளன.
இவ்வரலாற்றுச் சின்னம் முறையாக பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படும். மேலும்,அப்பகுதி மக்களின் காணிகள் உறுதிப்படுத்தப்படுவதோடு, அத்துமீறிய நிலப்பறிப்பும் தடுக்கப்படும். மேலும், பொதுத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அரச காணி பாதுகாக்கப்படுவதோடு, சட்டவிரோதக் கட்டிட அமைப்புகளும் தடைசெய்யப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News: Lankamuslim

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!