animated gif how to

13 வது திருத்தமும் கடும்போக்காளர்களின் வருத்தமும்!

November 20, 2012 |

-மூதூர் முறாசில்-

இலங்கையில் நடைமுறையிலுள்ள  மாகாண சபை முறைமையை இல்லாமற் செய்ய வேண்டும் என்ற கருத்து அண்மைக்காலமாக புகைந்து கொண்டிருந்த நிலையில் தற்போது தீப்பற்ற ஆரம்பித்துள்ளது.

இத்தீப்பற்றல் இடம்பெறும் சமகாலத்தில் 13வது திருத்தச்சட்டம் ஒழிக்கப்பட்டு அதற்கு பதிலாக 19வது திருத்தத்தை மேற்கொள்வது சம்பந்தமாக ஆளும் தரப்பினர் தீவிரமாக  ஆலோசித்து வருகின்றனர்.

இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பல்வேறு தீர்வுப் பொதிகள் காலத்திற்குக் காலம் கொண்டு வரப்பட்டபோதும் அல்லது கொண்டு வருவதற்கு முயற்சி எடுக்கப்பட்டபோதும் அத்தகைய தீர்வுப் பொதிகள் அதன் ஆரம்பத்திலேயே  நிராகரிக்கப்பட்டோ அல்லது அழிக்கப்பட்டோ வந்த வரலாற்றை நீண்ட காலமாக அவதானிக்க முடிகிறது.

ஆனால்,1987ஆம் ஆண்டில் செய்யப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கை யாப்பில் மேற்கொள்ளப்பட்ட   13வது திருத்தச் சட்டத்தின் மூலம் சிறுபான்மை மக்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பதை நோக்கமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறையானது சிறுபான்மை மக்களது பிரச்சினைகளுக்கு  தீர்வாக அமைந்ததென்பதை விட பெரும்பான்மை மக்களுக்கே பெரும் இலாபமாகவும் ஓரு கொடையாகவும் அமைந்திருந்தது.

சிறுபான்மை மக்களுக்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து அமைக்கப்பட்ட  முதலாவது வடகிழக்கு மாகாண சபை குறுகிய காலத்திற்குள் கலைக்கப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் மாகாணசபை முறையானது சிறுபான்மை மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வைக் கொடுக்காத  தேவையற்ற ஓரு சுமையாக இருந்து வந்தது.
 
ஆனால்,மாகாண சபை முறையானது அது வாழ்ந்த சுமார் 25 வருட காலத்தில் அதிக காலம்  சிறுபான்மை மக்களுக்கு  எவ்வித பயனையும்   கொடுக்காத  போதும்   பெரும்பான்மை மக்களை அது போசித்து வாழவைத்து  வந்ததனால்   அதனை நீக்குவது சம்பந்தமாக முனைப்பான நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை.

இதேவேளை, கிழக்கு மாகாணம் தனி மாகாணமாகப் பிரிக்கப்பட்டு 2008ஆம் ஆண்டில் முதலாவது கிழக்கு மாகண சபை அமைக்கப்பட்டு,    அம்மாகாண சபையானது மத்திய அரசாங்கத்தின் விருப்பு வெறுப்புக்களை அனுசரித்து நடந்து வந்த நிலையில்  ஒரு கட்டத்தில் (நீதி மன்றத்தின் கட்டளையின் பேரில் மத்திய அரசாங்கத்தினால்  மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட )  நாடு நகர சட்டமூலத்திற்கு  மத்திய அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கு  ஏகமனதாக எதிர்ப்பை வெளிப்படுத்தியதானது   இம்மாகாண சபையில் இடம்பெற்ற ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

இந்நிகழ்வானது மாகாண சபையின் குறிப்பாக சிறுபான்மை இனத்தவரது (மாகாண சபையின்)   பலத்தை பெரும்பான்மை மக்களுக்கு தெளிவூட்டிய அதேவேளை இச்சட்ட மூலத்தின் மூலம் பௌத்த மதத்திற்கு கிடைக்கவிருந்த பேறுகள் தடுக்கப்பட்டது அவர்களை மன வருத்தத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. (இந்நிகழ்வே வேறு சில காரணங்களோடு இணைந்து முதலாவது கிழக்கு மாகாண சபையை ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பு அதனைக்  கலைப்பதற்கு அடிப்படையாக அமைந்ததாக சில ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்)

முக்கியமாக இதன்; வெளிப்பாடே மாகாண சபையானது சிறுபான்மை மக்களுக்கு  அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக உள்ளதனதெனவும்  அதனை நடைமுறையிலிருந்து அகற்ற வேண்டுமெனவும் பெரும்பான்மை மக்கள் மத்தியில்(உண்மைக்குப் புறம்பான) கடும் போக்களர்களினால்   பரப்புரையை மேற்கொள்ளவும் செய்தது.

இது இவ்வாறு இருக்க, பொருளாதார அபிவிருத்தி அமைச்சானது அண்மையில் பாராளுமன்றத்தில் 'திவிநெகும' சட்ட மூலத்தை கொண்டு வரமுயற்சித்தபோது அச்சட்டமூலமானது மாகாண சபையின் அதிகாரத்தில் தலையீடு செய்வாதகக் கூறி உயர் நீதி மன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும் அவ்வழக்கை கவனத்திலெடுத்த நீதி மன்றம் அச்சட்டமூலத்தை பாராளு மன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்பு அனைத்து மாகாண சபைகளினதும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று    கூறியதும் அதற்கேற்ப கிழக்கு மாகாணம் உட்பட செயற்படும் எட்டு மாகாணங்களினது அங்கீகாரத்தினை பலத்த சிரமத்திற்கு மத்தியில் பெற்றுக் கொண்ட போதும் வட மாகாணம் ஆளுநரின்  கட்டுப்பாட்டில் இருப்பதனால் ஆளுநரின் அங்கீகாரம் மாகாண மக்களது விருப்பை பிரதிபலிக்காத நிலையில் 'இரு தெரிவுகளை' உள்ளடக்கிய நீதி மன்றத்தின் தீர்ப்பு பலமான  முட்டுக் கட்டையை  அச்சட்ட மூலத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.

இதனால்   மாகாண சபை முறையானது மொத்த நாட்டினதும் அபிவிருத்திக்கு தடையாக அமைந்துவருகின்றது என்ற கருத்தை ஆளுந்தரப்பினர் வெளிப்படையாக பேசுவதற்கும் கலந்துரையாடுவதற்கும் அதனை நீக்குவது சம்பந்தமாக தீவிரமாக சிந்திப்பதற்கும் வழிசமைத்துள்ளது.

உண்மையில் மாகாண சபை முறையானது சிறுபான்மை மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சரியானதோர் வழிமுறையாக அமையவில்லையே என்று கவலைப்படவேண்டியது  ஒரு புறமிருக்க,   மாகாண சபையானது பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய இரண்டு சட்டமூலங்களுக்கு முட்டுக்கட்டையாக அமைந்து விட்டதே என்ற கவலையும் அங்கலாய்ப்புமே மேலோங்கி இருப்பதைக் காணலாம்.

மாகாண சபை முறையையானது சிறு பான்மையினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவவில்லை என்று கூறி அதனை நீக்குவதற்கு முன்வருவதாக இருந்தால் அது வரவேற்கக் கூடிய ஒன்றாக அமையும். எனவேஅதற்கு பதிலாக வரப்போகும் தீர்வுப்பொதியும்  1310 ஆகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ அமையுமென எதிர்பார்க்கவும் முடியும்.
ஆனால்,மாகாண சபை முறை இருப்பதனால் தாம் உருவாக்கிய சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் முட்டுக்கட்டையாக இருக்கின்றதே என்ற மன உந்துதலில் அதனை நீக்குவதற்கு முன்வருவதாக இருந்தால் அது வரவேற்கக் கூடிய ஒன்றாக அமையாது.   ஏனெனில், அதற்கு பதிலாக வரப்போகும் தீர்வுப்பொதி  1310   ஆக அமைவதென்பது கேள்விக் குறியென்பதனாலாகும்.

இதனாலேயே மாகாண சபை முறைமையை ஆரம்ப காலம் தொட்டு கடுமையாக விமர்சித்து வந்த சிறுபான்மை கட்சிகள் தமது கருத்தில் நிலைகுலைந்து நிற்பதோடு 13வது திருத்தத்தை இல்லாமற் செய்வது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமென எச்சரிப்பதையும் பார்க்கின்றோம்.  இவ்வெச்சரிப்பின்  நியாயத்தை நாம் தெளிவாகவே உணர்ந்து கொள்ளவும் முடிகின்றது.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றவேண்டிய சட்டமூலங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் மாகாண சபை இருக்கின்றது  என்ற கருத்தையும் மறுபக்கம்   மாகாண சபைகளின் அதிகாரத்தில் குறித்த சட்டமூலங்கள் தலையீடு செலுத்துகின்றது என்ற கருத்தையும் ஒரு புறம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் அழுத்திச் சொல்லப்படவேண்டிய  மற்றுமொரு கருத்து   மறைந்து கிடப்பதை அவதானிக்க முடியும்.அதுதான் சிறுபான்மையினருக்கு பாதகமான அம்சங்களை இச்சட்ட மூலம் தன்னகத்தே கொண்டமைந்திருக்கின்றது என்பதாகும்.

சிறுபான்மையினருக்கு எதிரான இக்கருத்தோடு மாகாண சபை முறையை நீக்கவேண்டும் என்னும் வலுப்பெற்று வரும் கருத்தையும் தொடர்பு படுத்திப் பார்க்கின்றபோது சிறுபான்மை இனத்திற்கெதிராக ஏற்படப்போகும் விபரீதத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

இது இவ்வாறிருக்க சர்ச்சைக்குரிய திவிநெகம சட்டமூலம் சம்பந்தமாக சில அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தொடர்ந்த வழக்கில் அரசாங்கத்திற்கு சாதகமான தீர்ப்பொன்று கிடைக்காத   நிலையில் குறித்த தீர்ப்பை வழங்கிய பிரதம நீதியரசர் ஷpராணி பண்டார நாயக்கவுக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டு  முன்வைக்கப்பட்டுள்ளது கவனத்தக்குரிய விடயமாகும்.

எனவே,மாகாண சபையை இல்லாமற் செய்யவேண்டும் என்ற கருத்தின் பிறப்பிடத்தையும் கடும்போக்காளர்களின் நோக்கத்தையும் அவர்களது செயற்பாட்டையும்  வைத்துப் பார்த்தால் 13வது திருத்தத்தை ஒழிப்பதென்பது கடும்போக்காளர்களின்  வருத்தத்திற்கு ஒத்தணமிடும் ஓரு வேலைத்திட்டமே தவிர வேறில்லை!

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!